பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

நாயன்மார் கதை

பாதுகாப்பான ஓரிடத்தில் வைத்தார். வந்த அடியார் விடைபெற்றுக் கொண்டு சென்றார்.

சில காலம் சென்ற பிறகு சிவபெருமான் தான் தந்த ஓட்டைத் திருநீலகண்டர் வைத்த இடத்திலிருந்து மறையச் செய்துவிட்டு அவரிடம் சென்று, “என் ஓட்டைத் தா” என்றான். நாயனார் ஓட்டை வைத்த இடத்தில் போய்ப் பார்த்தார். அங்கே அது இல்லை. வேறு இடங்களில் எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை. அடியாரிடம் வந்து, “அந்த ஓட்டைக் காணவில்லை. இன்னும் சிறந்த ஓடு ஒன்றை நான் தருகிறேன்” என்றார். அடியாரோ சினம் மூண்டு, “அப்பொழுதே இந்த ஓட்டின் அருமையைச் சொன்னேனே! எனக்கு அதுதான் வேண்டும்” என்று வற்புறுத்தினார். திருநீலகண்டரோ ஒன்றும் செய்ய மாட்டாது விழித்தார். “சுவாமி, நான் வேண்டுமென்று அதைக் கெட்டுப் போக்கவில்லை. என்னை மன்னித்தருள வேண்டும்” என்றார்.

“அப்படியானால் நான் அதை எடுக்கவில்லை என்று சத்தியம் செய்து தருவீரா?” என்று கேட்டான் இறைவன். “செய்து தருகிறேன்” என்றார் நாயனார். “உம்முடைய மகன் கையைப் பிடித்துக்கொண்டு குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தாரும்” என்றான், வேடம் பூண்டு வந்த வித்தகன். “எனக்கு மகன் இல்லையே!” என்று கூறினார் நாயனார். “இல்லாவிட்டால் உம்முடைய மனைவியின் கையைப் பற்றி மூழ்கிச் சத்தியம் செய்யும்” என்றான் மாயம் வல்ல மகேசன்.

இப்போது நாயனாருக்குத் தர்ம சங்கடமான நிலை வந்தது. தம் மனைவியைத் தாம் தீண்டுவதில்லை என்பதை வெளியிடுவதா என்று யோசித்தார், “கடைசியில் அவ்வாறு செய்வதற்கில்லை” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/12&oldid=1405219" இலிருந்து மீள்விக்கப்பட்டது