பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநீலகண்ட நாயனார்

7


“நீ வேண்டுமென்றே என் ஓட்டை ஒளித்து வைத்து விட்டுச் சத்தியம் செய்யமாட்டேன் என்கிறாய். இந்த அக்கிரமத்தைத் தில்லை வாழந்தணர்களுடைய தர்ம சபையில் முறையிடுவேன்” என்று சொல்லி, நாயனாரையும் அழைத்துக்கொண்டு சென்று, அவையினர் முன் தன் வழக்கை இறைவன் எடுத்துரைத்தான். திருநீலகண்ட நாயனார் ஓட்டைத் தாம் ஒளித்து வைக்கவில்லை யென்றும், அது கெட்டுப் போயிற்றென்றும் கூறினார்.

“அப்படியானால் சத்தியம் செய்து தருவதுதானே முறை?” என்று அவையினர் சொல்ல, நாயனார் திருப்புலீச்சரத்துக்கு அருகிலுள்ள திருக்குளத்துக்குச் சென்று ஒரு மூங்கில் தடியை எடுத்து ஒரு பக்கத்தைத் தம் மனைவியாரைப் பற்றிக்கொள்ளச் சொல்லி மூழ்கப் போனார். அப்போது வழக்கிட்ட மறைமுனிவன், “கையைப்பற்றிக் கொண்டு மூழ்கினால்தான் நான் நம்புவேன்” என்று சொன்னான்.

இந்த நிலையில் தம்முடைய விரதத்தை யாவரும் கேட்கச் சொல்வதையன்றி வேறு வழியில்லாமல், அந்த வரலாற்றை ஆதிமுதல் சொல்லிவிட்டுக் குளத்தில் மூழ்கினார். மூழ்கி எழுந்த அளவில் அவ்விருவரும் இளமைப் பருவத்தை மீட்டும் அடைந்தவர்களாய் எழுந்தார்கள். அது கண்டு யாவரும் வியந்தார்கள். மறையவனாகி வந்த சிவபிரான் தன் கோலத்தை மாற்றி விடையின்மேல் எழுந்தருளிக் காட்சி கொடுத்தான்.

பின்பு நாயனாரும் அவர் மனைவியாரும் இளமை நீங்காமல் பலகாலம் இவ்வுலகில் வாழ்ந்து அப்பால் இறைவனுடைய திருவருளைப் பெற்றுப் பேரின்ப வாழ்வை அடைந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/13&oldid=1405354" இலிருந்து மீள்விக்கப்பட்டது