பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. இயற்பகை நாயனார்

பூம்புகாராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் வணிகர் குடியில் பிறந்தார் இயற்பகையார். சிவனடியார்களுக்கு ஏவல் செய்வதையும் அவர்களுக்கு வேண்டியவற்றை இல்லையென்னாமல் கொடுப்பதையும் தலைசிறந்த அறமாகக் கொண்டு வாழ்ந்தார் அவர்.

அவருடைய பெருமையை உலகுக்கு வெளிப்படுத்த எண்ணிய சிவபெருமான் சிங்கார வேடத்துடன் அவரை அணுகினான். இயற்பகையார் பெருமானைச் சிவனடியாரென்ற எண்ணத்தால் வரவேற்று வழிபட்டார் “நீர் சிவனடியார் வேண்டுவனவற்றை யெல்லாம் தருகிறீர் என்று கேள்விப்பட்டோம். நமக்கு வேண்டியதை உம்மிடம் வாங்கிக்கொண்டு போகலாம் என்று வந்தோம்” என்றார் வந்த அடியார்.

இயற்பகையார் “என்பால் உள்ளது எதுவானாலும் தேவரீருக்குத் தருகிறேன்” என்று சொல்லவே, சோதனை செய்வதற்காக வந்திருந்த பெருமான், “உம்முடைய மனைவியை வேண்டி வந்தேன்” என்றான்.

இதைக் கேட்ட நாயனார் திடுக்கிடவில்லை; முனிவு கொள்ளவில்லை. “என்னிடம் உள்ள பொருளையே கேட்டீர்கள்” என்று மகிழ்ச்சியே அடைந்தார். உடனே தம் மனைவியை அழைத்து, “இன்று உன்னை இந்தப் பெரியவருக்குக் கொடுத்துவிட்டேன்” என்று சொல்ல, மனைவி முதலில் மனம் கலங்கினாலும், கணவன் சொன்னபடி செய்வதே கற்பின் திறமென்று தெளிந்து, வந்த அடியாரை வணங்கி நின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/14&oldid=1405401" இலிருந்து மீள்விக்கப்பட்டது