பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்பகை நாயனார்

9


“இன்னும் நான் என்ன செய்யவேண்டும்?” என்று இயற்பகையார் அடியாரைக் கேட்க அவர், “நான் உன் சுற்றத்தாரையும் இந்த ஊரையும் கடந்து செல்லுமட்டும் நீ துணையாக வரவேண்டும்” என்றார். நாயனார் ஆடையை இறுக்கிக் கொண்டு கையில் வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டு, அடியாரையும் தம் மனைவியையும் முன்னே போகச் செய்து, பின்னே அவர்கட்குப் பாதுகாப்பாகச் செல்லலானார்.

சுற்றத்தார் இந்தச் செய்தியை அறிந்து ஆயுதங்களுடன் வந்து அவர்களை மறித்தார்கள். அப்போது இயற்பகையார் அவர்களுடன் போரிட்டுப் பலரைத் துணித்து வீழ்த்தினர்; சிலர் ஓடிப்போய்விட்டார்கள். அப்பால் பெருமானையும் தம் மனைவியையும் சாய்க்காடு என்னும் இடம் வரைக்கும் உடன்போய் விட்டபோது, “நீர் இனிப் போகலாம்” என்று அடியார் சொல்ல, நாயனார் திரும்பிக்கூடப் பாராமல் மீண்டார்.

அப்படி மீளும்போது சிவனடியார், “இயற்பகையாரே, ஒலம் ஒலம்!” என்று கூவினார். சுற்றத்தாரில் உயிர் பிழைத்தவர் யாராவது அவர்களைத் தடுக்கிறார்களோ என்று எண்ணி இயற்பகையார் திரும்பி அவர்களை நோக்கி ஓடினார். அப்போது இறைவன் நாயனாருடைய மனைவியை விட்டு விட்டு மறைந்தான். இயற்பகையார் தம் மனைவி மாத்திரம் தனியே நிற்பதைக் கண்டு திகைத்து நின்றபோதே, சிவபெருமான் இடப வாகனத்தின் மீது எழுந்தருளி அவ்விருவருக்கும் காட்சி கொடுத்தருளினான். பிறகு இறைவன் திருவருளால் அவ்விருவரும் சிவலோக பதவி பெற்றார்கள்.

சிவபெருமானுடைய அடியார்கள் பல வகையில் தம்முடைய அடிமைத் திறத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சிவபக்தி முதிர முதிர உலகில் உண்டான பற்றுக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/15&oldid=1405357" இலிருந்து மீள்விக்கப்பட்டது