பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்பகை நாயனார்

11

மனைவியினும் இனிய பொருள் பிறிது இல்லாமையால், சிவனடியார் வேடம் கொண்டு வந்து, இவரிடத்தே இவர் மனைவியையே கேட்க, இவர் கற்பினிற் சிறந்து விளங்கும் அம் மனைவியையும் மறாது பெரு மகிழ்ச்சியோடு கொடுத்தார். இதனால் இவர், “பனி மலர்க்குழற் பாவை நல்லாரினும்” சிவனே தமக்கு இனியன் என்று கொண்டார் என்பது துணியப்படும். அன்றியும் இவர் உயர் குடிப்பிறப்பினாலும் பெருஞ் செல்வத்தினாலும் உலகத்தாராலே நன்கு மதிக்கப்படுவோராய் இருந்தும், தாம் பிறருக்கு மனைவியைக் கொடுப்பின் உலகத்தாராலே பழிப்புரை உண்டாகும் என்பது நோக்கிற்றிலர். இதனால் இவர் மனசைச் சிவபக்தியே விழுங்கிற்றென்று துணிக. இவர், “நாடவர் பழித்துரை பூணதுவாக”க் கொண்டமையும் தேர்க.’

இத்தகைய மனநிலை மிக மிக உயர்ந்த பக்தி உடையவர்களுக்குத்தான் வரும். அந்த நிலையை உணர்ந்துகொள்வதற்கே ஒருவகை மனநிலை வேண்டும். இறைவனுடைய காதல் முறுகினபோது ஒரு தலைவி, “அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள் அகிலத்தார் ஆசாரத்தை” என்று திருநாவுக்கரசர் பாடுகிறார். அறத்தின் வழியே பொருளீட்டி இன்பம் துய்க்கும் உலகியல் நெறியில் வாழ்வாருக்கு அமைந்த ஒழுக்கமுறை இவர்களிடத்திலிருந்து நழுவிவிடும். அகிலத்தார் ஆசாரத்தை அளவு கோலாகக் கொண்டு இவர்களுடைய வாழ்க்கையை அளக்க இயலாது. இவர்களுக்கு இவர்கள் நின்ற நெறியே நெறி. பிறர் அப்படி நடக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாக அமைந்த நெறி அன்று இது. இலக்கணங்களில் சில சிறப்பான தகுதியினால் புறநடைகள் அமைந்திருக்கும். அதுபோலப் பக்தியினாலும் ஞானத்தினாலும் உயர்ந்து நின்றவர்களின் செயல்களுக்கு மற்றையோர் வாழ்க்கைக்குரிய இலக்கணத்தை இலக்கணமாகக் கொள்ளக்கூடாது. அவர்களுக்கு அந்த நெறியே இலக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/17&oldid=1405364" இலிருந்து மீள்விக்கப்பட்டது