பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நாயன்மார் கதை

கணம். அதைப் பிறர் தமக்குரிய இலக்கணமாகவும் கொள்ளக்கூடாது. பக்தியில் முறுகி நிற்கவேண்டுமென்ற குறிக்கோள் ஒன்றை மாத்திரம் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த நிலை நமக்குக் கிடைக்குமானால் நாம் வேறு ஏதேனும் ஒரு வகையில் அகிலத்தார் ஆசாரத்தை அகன்று நிற்போம்.

இதனை நினைந்தே சேக்கிழார் இயற்பகையாரை, “உலகியற் பகையார்” என்று சொல்கிறார். உலகத்தின் இயல்பான நெறிக்கு விரோதமாக நடப்பவர் என்று கொள்ள வேண்டும். உலகுக்கு விரோதமாக நடக்க வேண்டும் என்று எண்ணிச் செய்வது அன்று அது. தூங்குகிறவனுக்குத் தூக்கம் முறுகினபோது கையிலே பற்றிய பண்டம் எதுவானாலும் நழுவுவதுபோல, முறுகிய பக்தியில் உலகியல் தானே கழன்றுவிடும். தூங்குகிறவன் தன் கையில் உடையும் கண்ணாடிப் பாத்திரம் வைத்திருந்தாலும் நழுவ விடுவான்; விலையுயர்ந்த மாணிக்கத்தை வைத்திருந்தாலும் நழுவ விடுவான். அதே நிலையில் இத்தகையோர் தியாகம் செய்கையில் இன்ன பொருள்தான் கொடுக்கலாம் என்ற வரையறையோ, இதைக் கொடுக்கலாமா என்ற ஆராய்ச்சியோ, இதைக் கொடுத்தால் இன்னது நேருமே என்ற அச்சமோ இல்லாமல் இருப்பார்கள்.

ஆகவே இயற்பகையார் அடியார்களிடத்துக் கொண்ட முறுகிய பக்தி நிலையில், “மனைவியைக் கொடுக்கலாமா?” என்ற யோசனை எழவே இடம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/18&oldid=1405398" இலிருந்து மீள்விக்கப்பட்டது