பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. இளையான்குடி மாற நாயனார்

ளையான்குடி என்னும் ஊரில் மாறனார் என்ற வேளாளச் செல்வர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார் எவரானாலும் எத்தனை பேர் வந்தாலும் அவர்களை வரவேற்று வழிபட்டு உபசரித்து விருந்து செய்வித்து அனுப்புவது வழக்கம். இறைவன் அருளால் பெருஞ்செல்வராக இருந்தமையால் இந்தத் திருத்தொண்டு நல்லோர் போற்றும்படி இடையறாது நிகழ்ந்து வந்தது.

‘கையில் பொருள் இருந்தால் யாரும் இப்படி விருந்து போடலாம்’ என்று எவரேனும் நினைத்திருக்கலாம். வறுமை வந்து அடைந்தாலும் தம்முடைய தொண்டை இறுதி வரையில் செய்யும் மனப்பாங்குடையவர் மாறனார் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டி, இறைவன் அவருக்கு வறுமை வந்து அடையும்படி செய்தான். இளையான்குடி மாற நாயனார் அப்போதும் மாகேசுவர பூசை செய்வதில் இளையாதவராகித் தம் கையில் உள்ள பொருளை யெல்லாம் விற்றுத் தம் தொண்டைப் புரிந்து வந்தார்.

ஒரு நாள் நள்ளிரவு. மழைக்காலமாதலால் மழை சோவெனப் பெய்து கொண்டிருந்தது. தம்மிடம் இருந்த நெல்லில் ஒரு பகுதியைக் குத்தி அன்பர்களை உண்பித்தார் மாறர். மற்றொரு பகுதியைத் தம்முடைய வயலில் தெளித்திருந்தார்.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் உணவு இல்லாமல் போயிற்று. அன்று அவர்கள் பட்டினியாகவே படுத்துக்கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/19&oldid=1405400" இலிருந்து மீள்விக்கப்பட்டது