பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

நாயன்மார் கதை


அந்த நள்ளிரவில் இறைவன் ஓர் அடியவர் வேடம் பூண்டு மாற நாயனார் வீட்டை அடைந்தார். வந்த தொண்டரை வரவேற்று அவர்மேல் உள்ள ஈரத்தைத் துடைத்து அமரச் செய்து, அவர் பசியை ஆற்ற வழி தேடலானார். தம்முடைய மனைவியாரிடம், “இவ்வடியார் மிகப் பசித்திருக்கிறார். இவருக்கு உணவு அருத்த வேண்டும். என் செய்வது?” என்று கேட்டார்.

“வீட்டில் ஒரு பண்டமும் இல்லை. அயலார் அனைவரையும் கேட்டு வாங்கிய பண்டங்களுக்கும் அளவு இல்லை. இனி நமக்குக் கொடுப்பார் யாரும் இல்லை. இப்போது நள்ளிரவு வேறு. துர்ப்பாக்சியமுடைய யான் என் செய்வேன்!” என்று அந்த மங்கை நல்லார் வருந்தினார். பிறகு ஏதோ ஓர் எண்ணம் தோன்றவே, “காலையில் விதைத்த நெல்லை வாரிக்கொண்டு வந்தால் சமைத்துப் போடலாம்” என்று சொன்னார்.

நாயனார் புதையல் எடுத்தவரைப்போல மிக்க மகிழ்ச்சி அடைந்து ஒரு கூடையை எடுத்துக்கொண்டு வயலுக்கு ஓடினார். வீட்டிலே சிவனடியாரைச் சற்றே படுத்திருக்கச் சொல்லிவிட்டு அந்த நள்ளிரவில் கொட்டும் மழையில் வயலுக்கு ஓடினார். வயலை அடைந்து பெரு வெள்ளத்தில் மிதந்த முளை நெல்லைக் காலினால் தடவிப் பார்த்துக் கையினால் வாரி வாரிக் கூடையில் நிரப்பினார். பிறகு அந்தக் கூடையைத் தலையில் சுமந்து கொண்டு வந்தார்.

“ஐயோ! சமைக்க விறகு இல்லையே!” என்று அவர் மனைவியார் வருந்தினார்.

நாயனார் சற்றும் யோசிக்காமல் வீட்டு மேற் கூரையில் கட்டியுள்ள கொம்புகளைப் பிரித்துக் கொடுத்தார். அம்மையார் அடுப்பு மூட்டி முளை நெல்லை முதலில் வறுத்துப் பின்பு குத்தி அரிசியாக்கி உலையிலிட்டார். கறியமுதுக்கு என்ன செய்வோம் என்று யோசித்தபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/20&oldid=1405402" இலிருந்து மீள்விக்கப்பட்டது