பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

நாயன்மார் கதை

போக்க முந்தினர். இறைவனிடத்திலும் அடியாரிடத்திலும் முறுகிய பக்தி இருந்தாலன்றி, இத்தகைய செய்கையைச் செய்வது இயலாது. செயற்கரிய இந்தச் செய்கையைச் செய்ததனால்தான் இவர் நாயன்மாருள் ஒருவராக எண்ணும் பெருமையை அடைந்தார்.

5. மெய்ப்பொருள் நாயனார்

திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு சேதி. நாட்டை ஆண்டு வந்தார் மெய்ப்பொருள் என்னும் சிற்றரசர். வேத நெறியும் சைவ நெறியும் தழைக்கும் வண்ணம் ஆவன புரிந்து வந்தார். இறைவனுடைய அடியார்களைக் கண்டால் வணங்கி உபசரித்து அவர்களுக்கு, வேண்டியவற்றை வழங்குவது அவருடைய வழக்கம்.

அடியார்களுக்கு எளியவராக இருந்தாலும் பகைவர்களுக்கு அவர் அரியவராக இருந்தார். தம்முடைய வீரத்தால் மாற்றலர்களை வென்று புகழ் கொண்டார்; நீதி நெறியை நிலை நிறுத்தி வாழ்ந்தார்.

அவரோடு பன்முறை போர் புரிந்து அவர் முன் நிற்க, மாட்டாமல் தோல்வியுற்றான் முத்திநாதன் என்னும் அரசன். "இவரை வீரத்தால் வெல்லுவது அரிது; வேறு வழியில்தான் வெல்லவேண்டும்” என்று அவன் எண்ணினான். "மெய்ப்பொருள் மன்னர் திருநீறும் கண்டிகையும் அணிந்த கோலம் உடையவரைக் கண்டால் பணிவுடையராகி வேண்டுவனவற்றைக் கொடுப்பர்' என்பதை அறிந்து தானும் சைவ வேடம் பூண்டு அவரை வெல்லலாம் என்று தீர்மானித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/22&oldid=1405432" இலிருந்து மீள்விக்கப்பட்டது