பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

நாயன்மார் கதை

எனக்கு வாய்த்தது" என்று சொல்லி, "அருள் செய்ய வேண்டும்” என்று பணிந்தார். அப்படி அவர் வணங்கும்போது அந்த வஞ்சகன் புத்தக உறையிலிருந்து கத்தியை உருவிக் குத்திவிட்டான்.

அவன் அப்படிச் செய்தபோதும் தாம் பணிவதற்குரிய சிவ வேடம் அவனிடம் இருந்தமையால் மெய்ப்பொருளார் சிறிதும் தளராமல் அவனைத் தொழுதார். உயிருக்கே ஆபத்து நேர்ந்தபோதும் சிவ வேடத்துக்கு மதிப்பளித்து வணங்கும் தம்முடைய வழக்கத்தினின்று வழுவித் தோல்வியுறாமல் அவர் வெற்றி பெற்றார்.

முன்பே முத்திநாதனுடைய போக்கைக் கண்டு ஐயமுற்றிருந்த வாயில் காவலனாகிய தத்தன் உள்ளே புகுந்து தன் வாளை உருவி அவனைக் குத்தப் போனான். அப்போது மெய்ப்பொருளார் தம் கையால் அவனைத் தடுத்து, "தத்தா, இவர் நம்மைச் சேர்ந்தவர்" என்று சொல்லிக் கீழே விழுந்தார். தத்தன் அவரை அணுகி, "நான் என்ன செய்வது?" என்று கேட்டபோது, இந்த மெய்த் தவரை இந்த ஊரின் எல்லையளவும் கொண்டு சென்று, நகரமாந்தரால் எந்த இடையூறும் விளையாமல் பாதுகாத்துக் கொண்டு போய் விடுக" என்றார்.

தத்தன் அவ்வாறே கொண்டுபோய் விட்டு வந்தான். அவன் வருகைக்காகப் போகின்ற உயிரைத் தாங்கிக் கொண்டிருந்த மெய்ப்பொருளார் அவன் விட்டு வந்த செய்தியைக் கேட்டு, "இன்று நீ செய்த உபகாரம் யாரும் செய்ய முடியாது" என்று சொல்லி அமைச்சர் முதலியோரை அழைத்து, "திருநீற்றின்மேல் பேரன்புடன் வாழுங்கள்’’ என்று சொல்லி இறைவனைத் தியானித்தார். இறைவன் உமாதேவியாரோடு விடையின்மேல் எழுந்தருளிக் காட்சி தந்து எப்போதும் தன்னுடன் உறையும் நிலையை மெய்ப்பொருள் நாயனாருக்கு அருளினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/24&oldid=1405442" இலிருந்து மீள்விக்கப்பட்டது