பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 நாயன்மார் கதை

வாழ்ந்தார். அடிக்கடி திருத்தலங்களுக்குச் சென்று எம்பெருமானை வழிபட்டு ஏத்துவார். அந்தத் தலங்களில் இருக்கும் அடியார் திருக் கூட்டத்தைக் கண்டு வழிபட்டு அவர்களோடு இருந்து இன்புற்று வருவார். இறைவனுடைய திருவருட் சிறப்பை மற்றவர்களும் உணரும்படியாகத் தம்முடைய ஒழுக்கத்தால் வெளிப்படுகிறவர்கள் அடியார்கள். ஆகையால் அவர்களிடம் விறல்மிண்டருக்கு முறுகிய பக்தி உண்டாயிற்று. படமாடுங் கோயில் பகவனைத் பணிந்து நடமாடுங் கோயிலாக விளங்கும் அவர்களால்தான் பக்தியும் சமய நெறியும் வளர்ந்து வருகின்றன அல்லவா?

எல்லாத் தலங்களிலும் அடியார் திருக்கூட்டம் இருந்தாலும் திருவாரூரில் உள்ள திருக்கூட்டம் மிகச் சிறப்புடையது என்பதை விறல்மீண்ட நாயனர் கேள்வியுற்றார். தேவர்களெல்லாம்கூட வந்து ஆசிரயிப்பதனால் தேவாசிரயன் என்ற பெயர் உள்ள பெரிய மண்டபம் திருவாரூர்த் திருக்கோயிலில் இருக்கிறது. அந்த மண்டபத்தில் எப்போதும் அடியார்கள் குழுமியிருப்பார்கள். அவர்களே முதலில் வணங்கிவிட்டே திருக்கோயிலுக்குள் புகுவது சிவநேசச் செல்வர்களின் வழக்கம்.

விறல்மிண்ட நாயனார் திருவாரூருக்குச் சென்றார். அங்கே அடியார் திருக்கூட்டத்தையும் வன்மீக நாதரையும் பணிந்து கரையிலா மகிழ்ச்சியை அடைந்தார்.

அப்போது சுந்தரமூர்த்தி நாயனர் இறைவனைத் தரிசிக்கும் பொருட்டுத் திருக்கோயிலுக்குள்ளே புகுந்தார். 'அடியார் திருக்கூட்டத்தை வணங்கும் தகுதி எனக்கு வாய்ப்பது எப்போது?’ என்ற நினைவோடு தேவாசிரய மண்டபத்தினின்றும் சிறிதே ஒதுங்கிச் சென்றார். அப்படி அவர் செல்வதைக் கண்ட விறல்மிண்ட நாயனாருக்கு முதலில் வியப்பும் அப்பால் விசனமும் உண்டாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/26&oldid=1405445" இலிருந்து மீள்விக்கப்பட்டது