பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விறல்மிண்ட நாயனார்

21

"இவ்வளவு பெரியவர் அடியார் திருக்கூட்டத்தை வணங்காமல் செல்கிறாரே! இவரே இப்படிச் சென்றால் மற்றவர்கள் எப்படி அடியார்களிடம் மதிப்பு வைப்பார்கள்?" என்று கேட்டார் அருகில் நின்ற அன்பர் ஒருவர், "அவர் இறைவன் திருக்கோயிலுக்குள் செல்கிறார்" என்றார். "அதற்கு முன் வணங்கும் தெய்வம் இங்கே இருப்பதை மறந்து விட்டாரே? இவர் நமக்கு வேண்டாதவர்; புறகு" என்று கோபத்தோடு கூறினார்.

"இறைவனுடைய அருளைப் பெற்றவர் சுந்தரமூர்த்தி. ஆரூர்ப் பெருமான் பரவை நாச்சியாரைத் திருமணம் செய்வித்து இவரை இத்தலத்தில் இருக்கும்படி அருள் செய்திருக்கிறார்" என்றார் அன்பர்.

"அப்படியானால் அந்த ஆரூர்ப் பெருமானும் எனக்குப் புறம்பானவரேl" என்று கோபத்தோடு சொல்லிப் புறப்பட்டுவிட்டார் விறல் மிண்டர்.

விறல்மிண்ட நாயனாருக்கு மூண்ட சினத்தைச் சுந்தர மூர்த்தி நாயனார் உணர்ந்தார். 'இறைவனை வழிபடுவது எளிது; தொண்டரை வழிபடுவது அரிது. அதற்குத் தகுதி மிகுதியாக வேண்டும்' என்ற நினைவினால்தான் அவர் அடியார் திருக்கூட்டத்தை அணுகவில்லை. இப்போது விறல்மிண்டர் செய்கையைக் கேட்டு மிக வருந்தினார். ஆரூர்ப் பெருமானிடம், "இந்த அடியார்களுக்கு அடியனாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டினார். திருத்தொண்டர்களைப் போற்றித் துதி செய்யவேண்டுமென்னும் கருத்து உண்டாயிற்று. அப்போது இறைவனே, "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுத்தான். அதை முதலில் வைத்துத் திருத்தொண்டத் தொகையைப் பாடி அடியார் திருக்கூட்டத்தையும் வணங்கினார் சுந்தர மூர்த்தி நாயனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/27&oldid=1405446" இலிருந்து மீள்விக்கப்பட்டது