பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

நாயன்மார் கதை

களோ, நடமாடும் திருக்கோயில்களாக விளங்கிப் பல இடங்களுக்குச் சென்று, நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் மறைந்திருக்கும் அன்பைச் சுரக்கச் செய்து, சிவ புண்ணியச் செல்வத்தைச் சேமிக்கும் செயல்களைப் புரியும்படி செய்கிறவர்கள். சாஸ்திரங்களாலும், புராணங்களாலும், ஆலயங்களாலும் மக்களுக்கு இறைவனிடம் உண்டாகும் பக்தியைவிட, உண்மையான சிவனடியார்களோடு பழகுவதனால் உண்டாகும் பக்தி வலிமை உடையது. ஆகையால் சிவனடியார்களுக்கு நன்மை செய்வதால் சிவபக்தி வளரும் பண்ணைக்கு உரம் இட்டதாகும். இந்த உண்மையை நினைந்தே பெரியவர்கள் சிவனடியர்களைப் பேணிப் பாதுகாத்தார்கள். பழ மரத்துக்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தால் அது கனியாகச் சொறிவது போலச் சிவனடியார்களுக்கு வேண்டியவற்றை வழங்கிப் போற்றினால் அவர்களால் சிவபக்தி எங்கும் விளைந்து கனிந்து பெருகும்.

அமர்நீதி நாயனார் சிவனடியார் பெருமையை நன்கு உணர்ந்தவர். ஆதலால் அவர்களுக்கு அமுதும் ஆடையும் வழங்கி வழிபட்டார். இறைவன் எழுந்தருளிய ஆலயம் நல்லூரில் இருந்தாலும் அடியார்கள் எழுந்தருளும் ஆலயமாகிய திருமடம் இல்லாமல் இருப்பது அவருக்குக் குறையாகத் தோன்றியது. அதனால் அத்தலத்தில் திருமடம் ஒன்றைக் கட்டுவித்து அடியாரை உபசரிக்கும் அறத்தைச் செய்து வந்தார்.

சிவனடியார்களுக்கு வேண்டியதை அளிக்கும் திறத்தில், எத்தகைய சோதனை வந்தாலும் தளராமல் தம் கடமையைச் செய்ய வல்லவர் அமர் நீதியார் என்பதை உலகினருக்குக் காட்டத் திருவுள்ளம் கொண்டான் சிவ பெருமான். ஓர் அந்தணப் பிரமச்சாரியாகத் திருக்கோலங் கொண்டு அமர்நீதி நாயனாருடைய மடத்துக்கு எழுந்தருளினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/30&oldid=1405450" இலிருந்து மீள்விக்கப்பட்டது