பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமர்நீதி நாயனார்

25

தலையிலே குடுமியும், நெற்றியில் திருநீறும், மார்பில் பூணூலும் மான் தோலும், கையில் பவித்திரமும், அரையில் தருப்பைப் புல்லினாலான முஞ்சியென்னும் நானும், கோவணமும் விளங்கப் பிரமச்சாரி தோன்றினார். கையிலே ஒரு தண்டை ஏந்தியிருந்தார். அதில் இரண்டு கோவணங்கள் இருந்தன. திருநீற்றுப் பையும் தருப்பையும் ஏந்தியிருந்தார். -

அவர் கோலத்தைக் கண்டவுடனே மனம் உருகிய அமர்நீதியார் அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "தேவரீர் இங்கே எழுந்தருளுவதற்கு நான் என்ன தவம் செய்தேன்" என்று கூறினர்.

"நீர் சிவனடியார்களுக்கு நல்ல விருந்தளித்து, கந்தையாடை, கீள், கோவணம் ஆகியவற்றை வழங்குகிறீர் என்று கேள்வியுற்றேன். உம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்று பிரம்மசாரி கூறினார்.

"இங்கே துாய அந்தணர்கள் சமையல் செய்கிறார்கள். தேவரீர் இருந்து அமுது செய்தருள வேண்டும்" என்று அமர்நீதியார் பணிந்து வேண்டினார்.

"அப்படியே செய்கிறேன். முதலில் நான் காவிரிக்குச் சென்று நீராடி வருகிறேன். மழைக் காலமாக இருப்பதனால் இந்தக் கோவணம் நனைந்து போனாலும் போகும். இதோ இதை இங்கேயே பாதுகாப்பாக வைத்திரும்" என்று சொல்லி அவ்வந்தணர் தண்டில் இருந்த இரண்டு கோவணங்களில் ஒன்றை அவிழ்த்து வணிகர்பிரானிடம் தந்தார். "இந்தக் கோவணம் மிகவும் சிறந்தது. இம்மாதிரி வேறு கோவணம் எங்கும் கிடைக்காது. இதைப் பத்திரமாக வைத்திருந்து நான் நீராடி மீளும்போது கொடுக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு அவர் நீராடச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/31&oldid=1405453" இலிருந்து மீள்விக்கப்பட்டது