பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நாயன்மார் கதை

ஆசையோ? நன்று நன்று, உம்முடைய வாணிகம்" என்று சீறினார்.

அமர்நீதியார் அவர் பேச்சைக் கேட்டு நடுங்கினார். "இந்த அற்பன் செய்தது பெரிய பிழை என்பதை உணர்கிறேன். தேவரீர் எப்படியாவது பொறுத்தருள வேண்டும். நான் தெரிந்து இந்தத் தீங்கைச் செய்யவில்லை" என்று சொல்லி அடியார் காலில் விழுந்தார். "உங்கள் கோவணம் ஒன்றைத் தவிர வேறு எது கேட்டாலும் தருகிறேன். பட்டாடைகள் வேண்டுமென்று கேளுங்கள்; தருகிறேன். மணிகள் தருகிறேன். எப்படியாவது தேவரீர் சமாதானம் அடைய வேண்டும்" என்று கெஞ்சினார்.

அவர் பணிந்து இரந்து வேண்டுவதனா சற்றே இரங்கியவரைப் போலக் காட்டிய பிரம்மச்சாரி, "உம்முடைய பட்டும் பட்டாவளியும் மணியும் பொன்னும் எனக்கு எதற்காக? என்னுடைய கோவணத்துக்குச் சமானமானது ஒன்று தந்தால் போதும்" என்றார்.

உயிர் வந்தவரைப்போல ஆறுதல் பெற்ற நாயனார், "சுவாமி, கோவணத்துக்குச் சமானமானதைத் தருகிறேன். அதற்குச் சமானம் என்று தெரிந்து கொள்ளத் தேவரீர் என்ன முறையை விதிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"நீர் தொலைந்துபோனதென்று சொல்கிறீரே, அந்தக் கோவணத்தின் ஜோடி இதோ இந்தத் தண்டத்தில் இருக்கிறது. இதற்குச் சம எடையுள்ளதை நீர் தாரும்; போதும்" என்று அடியார் கூறினார்.

'இது மிகவும் எளிது’ என்ற எண்ணத்தோடு ஒரு பெரிய தராசைக் கொண்டுவந்து அங்கே நட்டு, அந்தணரிடமிருந்து அந்தக் கோவணத்தை வாங்கி ஒரு தட்டில் இட்டார் அமர்நீதியார். வேறொரு புதிய கோவணத்தை மற்றொரு தட்டில் இட்டார். அந்தணர் கோவணம் இட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/34&oldid=1405457" இலிருந்து மீள்விக்கப்பட்டது