பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமர்நீதி நாயனார்

29

தட்டுக் கீழே நின்றது. பின்னும் பெரிய கோவணம் ஒன்றை இட்டார். அதன் எடையும் சமமாக இல்லை. ஒன்றுக்கு இரண்டாக வைத்தார். அப்போதும் அந்தத் தட்டுத் தாழ்ந்தே இருந்தது. பின்பு அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த கோவணங்களில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். அப்போதும் பழங் கோவணத் தட்டு எழவே இல்லை. 'இது பெரிய அதிசயமாக இருக்கிறதே!' என்ற பிரமிப்புடன் அமர்நீதியார் மற்ற ஆடை வகைகளே ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். தராசு நேர் நின்றபாடில்லை. 'உலகில் இல்லாத மாயக் கோவணமாக இருக்கிறதே!' என்று வியப்படைந்தபடியே தம்மிடத்திலிருந்த பட்டுத் துணி, மற்ற ஆடைகள் எல்லாவற்றையும் வைத்தார். அப்போதும் கனம் போதவில்லை. ஆடைகள் யாவற்றையும் வைத்த பிறகு, "சுவாமி, இத்தனை ஆடைகளும் போதவில்லை. இனி என்னுடைய செல்வத்தை இடலாம் என்று நினைக்கிறேன். தேவரீர் திருவுள்ளம் எப்படியோ?" என்று அமர்நீதியார் கேட்டார். "எப்படிச் செய்தாலும் சரி, கோவணத்தின் எடைக்கு எடை வேண்டும்" என்றார் அடியார்.

உடனே வணிகர் பிரான் தம்மிடம் உள்ள பொன்னையும் மணிகளையும் துலைத் தட்டில் இடலானர். அதுவோ வந்ததெல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பலாக, எவ்வளவு போட்டாலும் கொஞ்சமேனும் தாழாமல் நிமிர்ந்தே நின்றது. பொன்னை இட்டார்; வெள்ளியை இட்டார்; நவமணித் திரளை இட்டார்; பித்தளை வெண்கலம் முதலிய உலோகப் பொருள்களை இட்டார். இட்ட கட்டு மேல் எழுந்தபடியே நின்றது. அருகில் நின்றவர்கள் இதைக் கண்டு திகைத்தார்கள், இறைவனுடைய கோவணத்துக்குச் சமானமாக அகில புவனங்களும் வந்தாலும் நேர் நிற்க முடியுமா? வேதத்தையே கோவணமாக அல்லவா சாத்தியிருக்கிறான் இறைவன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/35&oldid=1405459" இலிருந்து மீள்விக்கப்பட்டது