பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

நாயன்மார் கதை

தொகையே முதல் முதலாக அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிச் சொல்லுகிறது. “தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கும் அத்திருப்பதிகத்தை அடியொற்றி, முதல் ராஜ ராஜ சோழன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டர் நம்பிகள் நாயன்மார் வரலாற்றைத் தெரிந்து, ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ என்ற நூலைப் பாடினார். திருத்தொண்டத் தொகைக்கு வகையாக அது இருக்கிறது. சேக்கிழார் அந்த அந்தாதியை விரித்துப் புராணமாகச் சொன்னார். திருத்தொண்டத் தொகையை தொகைநூல்; திருத்தொண்டர் திருவந்தாதி வகை; பெரிய புராணம் விரி. அதனால் பெரிய புராணத்துக்கு ‘திருத்தொண்டத் தொகைவிரி’ என்ற பெயரும் வழங்கும். திருத்தொண்டர் புராணம் என்பதே சேக்கிழார் வைத்த பெயர்.

பல காலமாக நாயன்மார் வரலாறுகளைத் தேடித் தொகுத்துச் சிந்தையில் தேக்கி இருந்தமையாலும், திருவருட்பலம் இருந்தமையாலும் சேக்கிழார் இந்தக் காவியத்தை அற்புதமாகப் பாடி முடித்தார். ஓர் ஆண்டு பெரிய புராண அரங்கேற்றம் சிதம்பரத்தில் நடைபெற்றது. அரங்கேற்ற முடிவில் அரசன் சேக்கிழாரை வணங்கி, யானையின்மேல் ஊர்வலம் வரும்படி செய்தான். தன் இரண்டு கைகளிலும் இரண்டு கவரிகளை ஏந்திச் சேக்கிழாருக்கு வீசினான். புவிச்சக்கரவர்த்தியாக இருப்பினும், தொண்டர்சீர் பரவ வல்லாருக்குரிய பெருமைக்கு முன் அவன் பணிவதற்குரியவன் என்ற உண்மையை உலகம் அறிந்து வியந்தது.

பெரிய புராணம் தமிழில் உண்டான நூல். இது தமிழ்நாட்டில் உலவத் தொடங்கிய பின், தேவார ஆராய்ச்சியும் நாயன்மார் வழிபாடும் மிகுதியாயின. சமயாசாரியர்களிடம் பக்தி வளர்ந்தது. சிவபக்தி ஓங்கியது. சைவம் தழைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/8&oldid=1404817" இலிருந்து மீள்விக்கப்பட்டது