பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில்லை வாழ் அந்தணர்

3


பெரிய புராணம் தேவாரத்துக்கு உரை கூறும் நூல்; நாயன்மார் வரலாற்றைக் கூறும் சரித்திரம்; சொற்பொருள் இன்பம் தரும் காப்பியம்; சிவபக்தியை ஊட்டும் இலக்கியம்; படிப்பாருக்கு அமைதியையும் பண்பையும் உண்டாக்கும் தெய்வீகப் பனுவல்.

1. தில்லை வாழ் அந்தணர்

சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாட முற்பட்டபொழுது இறைவனே, “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று முதல் எடுத்துக் கொடுத்தருளினார். சிவபெருமானுடைய திருவாக்கால் பாராட்டப் பெற்ற சிறப்புடையோர் தில்லைவாழ் அந்தணர்.

தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேர். ஸ்ரீ நடராசப் பெருமானை வழிபட்டுப் பூசை புரிவதே தம்முடைய தவமாகவும் வாழ்க்கைப் பயனாகவும் கொண்டவர்கள் இவர்கள். வேதமும் ஆகமமும் கற்ற அறிவினர். அந்தணர்களுக்குரிய ஒழுக்கத்தினின்றும் பிறழாமல் எரியோம்பி நான்மறையும் ஆறங்கமும் பயின்று, திருநடம் புரியும் பெருமானுக்கு ஆளாக நிற்பதையே செல்வமாகக் கொண்டவர்கள்.

பிறர் இறைவனைப் பூசித்து வழிபடுவதாலேயே வேறு ஒரு பயன் உண்டென்று நினைப்பார்கள். தில்லை மூவாயிரவரோ அவனுடைய அணுக்கத் தொண்டு செய்து வாழ்வதையே இன்பப் பேறாகக் கொள்பவர்கள். தானத்திலும் தவத்திலும் தலைசிறந்து நிற்பவர்கள்.

கோயில்கள் பல இருந்தாலும் கோயில் என்றவுடன் தில்லையை நினைப்பது சிவனடியார் மரபு. அதற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/9&oldid=1404818" இலிருந்து மீள்விக்கப்பட்டது