பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

99


துவண்ட மெல்லிய தளிர்களைக் கொண்ட செடி கூட நாளடைவில் காழ்த்து வலிவு பெற்றுக் கட்டுத் தறியாகிறது. அது காற்றுக்குத் துவண்டு வெறும் கீற்றாகச் சாய்ந்து விட்டிருந்தால் போற்றத்தக்க இந்தப் பெருமையை அடைந்திருக்க முடியாது. காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்து நிமிர்ந்து நின்று திமிர்ந்து மரமாகி அது வைரம் பாய்ந்து அசைக்க முடியாத நிலை பெற்றுவிடுகிறது, இஃது உழைப்பாளிக்கு ஒரு ஆசான். அதைப் பார்த்து இவன் விடாப்பிடியாகத் தொடர்ந்து உழைத்தால் முன்னுக்கு வருவான்; கட்டுத்தறியில் யானையைக் கட்டி வைக்க முடியும்; இவன் பல பேர் சுற்றத்தினர் நாடி இடம் அளிக்கும் செல்வனாகத் திகழ்வான்.

வலிமைமிக்க புலி பசித்தால் அது பட்டினி கிடக்காது; சிறு தவளை கிடைத்தால் அதைப் பிடித்து அந்நேரத்திற்கு உயிர்வாழ முற்படும். அதுபோலக் கால் தொழிலாக இருந்தாலும் அது மேலான தொழில் என்று அதைத் தொடங்குக. பிறகு மெல்ல மெல்ல முன்னேறலாம். தொடங்கும்போதே பெரிய அளவில் தான் தொடங்குவேன் என்று அடம் பிடித்தால் தடம் புரள்வது ஆகும். அரிய செயல் என்று அசதி காட்டினால் அஃது ஆண்மைக்கு இழுக்கு; பூ முடித்துப் புனைவுகள் செய்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தால் அதனைப் பெண் ஒருத்தியே செய்துவிடுவாள். செயற்கரிய செயலைச் செய்வதுதான் பெருமைக்கு அழகு, “இது நம்மால் முடியுமா?” என்று திகைப்புக் காட்டத் தேவை இல்லை; முடியும்; முயல்க; வெற்றி காண்க.