பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

111


நட்பை நிலைநிறுத்தும். “ஒருவர் பொறை இருவர் நட்பு” இத்திருவாசகத்தை நாளும் கடைப்பிடிக்க நட்புக் கெடாது,

பழகிவிட்ட பிறகு அவர்களை ‘அழகன்று’ என்று அவர்களை விலக்குதற்கு முயன்றாலும் அவர்கள் மழகன்று போல் உன்னையே சுற்றி வருவர். நெஞ்சில் மூட்டும் தீபோல அவர்கள் எரிச்சலை ஊட்டுவர் என்றாலும் அவர்கள் பிழையைப் பொறுப்பது நமைச்சலைத் தாங்கிக் கொள்வதுபோல் ஆகும்.

நல்லது செய்தல் ஆற்றார் எனினும் அவனை விட்டுவிட முடியாது. நட்புக்கொண்டவன், நயத்தக்க நாகரிகம் உடையவன், அவனை எப்படி விட்டுவிட முடியும்? நெருப்பு சுடத்தான் செய்கிறது; பொலிவுமிக்க வீட்டினையும் எரிக்கவல்லது. நெருப்பு இப்படிப் பேரழிவுகள் செய்கிறது. அதற்காக நெருப்பே மூட்டமாட்டோம் என்றால் அடுப்பு எரியாது; வயிறு கடுப்புத்தணியாது. யாரும் நெருப்பு இன்றி வாழ முடியாது. பருப்பில்லாமல் கலியாணம் இல்லை; பகுப்பு இல்லாமல் வகுப்பு அமையாது. தொகுப்பு என்ற நிலையில் பார்த்தால் உன் நண்பனை வெறுப்புக் கொண்டு ஒதுக்க இயலாது.

செறிவு கொண்டு பழகியபின் அறிவு கொண்டு அணைத்துக் கொள்பவரே சான்றோர் ஆவர். பிழைகள் சில கண்டு அவன் உடன் பழகுதல் தவிர்ப்பது அழகு அன்று: கண்ணைக் குத்திவிட்டது என்பதால் ஒருவன் தன் கையை வெட்டிக் களைந்துவிட முடியுமா? அவர்களிடத்து உள்ள குறைகளை எடுத்து அறைபறை செய்தால் அவர்கள் நீசர் ஆவர்.