பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


எதிரி தலை நிமிர்ந்து வாழும்போது நல்லது கெட்டது காண அவனோடு மோதினால் அஃது ஆண்மை; அந்த வெற்றி நிலைத்து நிற்கும்; குறுக்கு வழி சறுக்கிவிடும். திங்கள் பிறை வடிவில் இருக்கும்போது இராகு கேது இவை அதனைப் பற்றா, முற்றி வளர்ந்த நிலையிலேயே அவை அதனைச் சுற்றும்;; அதுவே அதற்குப் பெருமை: கடன்பாக்கி கேட்பதாக இருந்தால் அவன் கையில் காசு உள்ளதா என்று கவனிக்க வேண்டும்; சட்டி பானை தெருவில் எறிகிறேன் என்றால் அது குன்று முட்டும் குருவியின் செயல் ஆகும்.

ஏழைகள் என்றும் அடங்கி இருப்பது அவர்களுக்கு ஏற்றம் தரும்; நிறை குடம் தளும்பாது; குறை குடம் நீர் தளும்பினால் உள்ளதும் வெளிப்படும். அடக்கம் இல்லை என்றால் அவனை மற்றவர்கள் முடக்கிவிடுவர். அவனைப் பற்றி ஆதியோடு அந்தமாக நீதிகேட்டு விமரிசிப்பர். தப்பிப் பிறந்தவன் என்று அவன் பிறப்பில் தப்புக் காண முற்படுவர். உலகம் அவனை ஒப்புக் கொள்ளாது. அடக்கம் உயர்வு தரும்; அதுவே பிழைக்கும் வழி; அடங்காமை நிறை வறுமையுள் ஆழ்த்தி விடும். இல்லாதவர்கள் அவசரப்படக்கூடாது. வாய்க் கொழுப்பால் மண்ணைத் தலையில் வாரிக் கொட்டிக் கொள்ளக்கூடாது.

எட்டிக்காய் எட்டிக் காய்தான்; அதனை எந்த நிலத்திலும் விதைத்தாலும் அது தென்னையாக மாறவே மாறாது. அனைவரும் உயர்வுதரும் சுவர்க்கம் புகுவர் என்று கூறமுடியாது; ஒரு சிலர்க்கே அந்த வாய்ப்பு அமைகிறது. அதற்காக அங்கலாய்ப்புப்பட்டால் பயன் இல்லை.