பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

121



27. பணம் படைத்தும் என்ன பயன்?
(நன்றியில் செல்வம்)

விளாமரம் பக்கத்திலேயே காய்க்கிறது. அதன் மணம் மூக்கையும் துளைக்கிறது. வவ்வால் அருகிருந்தும் அதைத் தின்னச் செல்வது இல்லை. அது அதற்குப் பயன்படாது.

செல்வர்கள் மிக அருகில்தான் இருப்பார்கள் என்றாலும் மானம்மிக்க நல்லோர் அவரிடம் சென்று உதவிக்குக் கேட்கமாட்டார்கள். அச்செல்வம் பயன்படாத ஒன்று யாருக்கும் பயன்படாது. அவர்களே வைத்துப் பூஜிக்கிறார்கள். என்செய்வது?

அள்ளிக்கொள்ளத் தக்கவகையில் கள்ளிப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அவற்றை யாரும் தலையில் சூடிக் கொள்வது இல்லை; சென்று பறிப்பதும் இல்லை. கீழ் மக்கள் செல்வம் மிக்கு வைத்திருந்தாலும் அறிவுடையவர் அவர்களைத் தேடிச் செல்லார்.

அடுத்த வீட்டு ஆசாமி, கொடுத்துப் பழக்கமில்லாத கருமி, அவனிடம் அவசரத்துக்கு என்று கேட்டால் சராசரி மனிதனாகக் “கொடுப்பது இல்லை” என்று கைவிரிப்பான். அவன் 'கடல் நீர். உவர்க்கும்; யார்க்கும் குடிக்கப் பயன்படாது. கிணறு சிறிதுதான்; அதன் தண்ணிர் பருகப் பயன்படும். செல்வம் படைத்தவர்கள் நல்ல உள்ளம் படைத்தவராக இருப்பது இல்லை. ஏழைகளே ஒரளவு அவசரத்துக்கு ஆறுதல் காட்டுவர்