பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


என்று கருதப்படுகிறது. இதில் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லை. கஞ்சத்தனம் இருசாராரிடமும் உள்ளது. நல்லவர்கள் எங்கோ ஒரு சிலர் நன்மை செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களைத்தான் வறியவர் நாடுவர்; தேவைப்பட்டவர் தேடிச் செல்வர்; நாடிய பொருள் அங்குக் கைக்கூடும்.

கரிமுள்ளிச் செடியும், கண்டங்கத்திரியும் யாருக்குமே பயன்படுவது இல்லை. இவற்றைப்போல ஒரு சிலர் செல்வம் பிறர்க்குப் பயன்படாமல் சீரழிகிறது. என் செய்வது; தேவை உடையவரைச் செல்வம் நாடுவது இல்லை. தேவை அற்றவரிடம் அது சேர்ந்து பதுங்கிக் கொள்கிறது.

நல்லவர்கள் செல்வம் பயன்படுபவை; பலர் இருக்கிறார்கள் கஞ்சத்தனம் உடைய கீழ்மக்கள்; அவர்களிடம் செல்வம் தஞ்சம் புகுந்து கொண்டு வெளிவர மறுக்கிறது. என் செய்வது?

நற்குணம் மிக்க பொற்புடையாரிடத்து வறுமை அடைக்கலம் புகுகிறது; பலாப் பிசின் போல ஈயாத கஞ்சன்பால் செல்வம் ஒட்டிக் கொள்கிறது. இது வியப்புக்கு உரியது; இந்த நிலை மாறவேண்டும். உடையவர் இல்லாதவர் என்ற பேதம் நீங்கினால்தான் சமுதாயம் சீர்படும்.

தாமரை மலரில் தாள் வைக்கும் பொன்மகளே நன்மக்களை விட்டு விட்டுப் புன் மக்களைக் காக்கிறாள்; ஏன்? சிந்தித்துப் பார்க்க வேண்டிய சீர்கேடு இது, பணம் எங்கும் முடங்கிக் கிடக்கக் கூடாது. அது பொருளாதாரச் சீர்கேடு; இது மாதிரிதான் வாழ்க்கை இன்பமும்.