பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

133


நேரத்திற்குள் மாமியார் வருகிறாள். “அவள் என்ன சொன்னாள்? என்று கேட்கிறாள். “நாளை வா என்றார்கள்” என்கிறான் வந்தவன். "இந்த வீட்டில் அவளுக்கு என்ன அதிகாரம்? நான் சொல்கிறேன். இந்தப் பக்கம் எப்பொழுதும் வராதே” என்று திருத்தமாகக் கூறுகிறாள்.

உள்ளுரில் இருந்து வேதனைப்படுவதை விட வெளியூர் சென்று நாலு வீடு கேட்டு வயிற்றுப் பசி தீர்த்துக் கொள்வது வகையான வாழ்வாகும். அங்குப் பகை இல்லை; உறவு இல்லை; இந்த நகை இல்லை. பூ இழந்த கொடியை எந்த வண்டும் நாடாது.

பொருளிழந்த வறியவனை எந்தச் சுற்றமும் சூழ மாட்டார்கள். அவர்கள் தனித்து வாழ வேண்டியதுதான்; சுற்றம் என்று சொல்லிக் கொள்ளத் தேவை இல்லை. அற்றபோது சற்று விலகி வாழ்வதே மேலாகும்.


30. தம் நிலையில் தாழாமை
(மானம்)

பணம் படைத்துவிட்டாய்; அது உன் உழைப்பால் வந்தது. ஒப்புக் கொள்கிறோம். அதனால் மற்றவர்களைத் தாழ்த்திப் பேச நினைக்கக் கூடாது. மற்றவர்களை வருத்தக் கூடாது. அப்படி வருத்தினால் அது பிறர் மனதைச் சுடும்; காட்டுத் தீப்போல் படும். மானம் உள்ளவர் அதனை நிதானமாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவர்கள் எரிமலையாக மாற இந்தக் கொடுமையாளர்தாம் காரணம்.