பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

135


கடன் கேட்பது இல்லை. “நன்கொடை தருக” என்று நவின்றது இல்லை. உப்புக்கும் மிளகுக்கும் 'அப்பு' என்று அடுத்த வீட்டை அணுகியது இல்லை. கடிகாரம் நேரம் பார்க்கவும் மற்றவர் கை காட்டு என்று கேட்டதில்லை. எழுதித் தருகிறேன் என்று பிறர் எழுதுகோல் அவரசரத் துக்கும் அங்கீகரித்தது இல்லை. இவன் இப் பிறவியில் இன்பம் பெறுகிறான்; மறுபிறவியிலும் நல் வாழ்வு அடைகிறான்; “யாமார்க்கும் கடன் அல்லோம்” என்ற இறுமாப்பு: அஃது அவனுக்குச் செம்மாப்பு.

குறுக்கு வழியிற் சென்று செருக்கோடு வாழத் தருக்கு உடையவர் நினைக்க மாட்டார்கள். பாவமும் பழியும்தரும் என்றால் அந்த வழிநோக்கிச் செல்லார். அதைவிட ஒரு முழம் கயிறு, மூட்டைப் பூச்சி கொல்லி, இன்னும் இத்தகைய வகையறாக்கள் அவற்றைத் துணை தேடுவர். சாவு ஒரு நாள் நிகழ்ச்சி. அதற்குப் பிறகு நிலையான புகழ்ச்சி, மானத்தோடு வாழ்ந்தான் என்று எங்கும் தொடர்ந்த பேச்சு. பழி அது என்றும் நிற்கும். நினைத்து நினைத்து மனம் அழிய வேண்டியதுதான்; இன்பம் என்று மகிழ்ந்து பிறர்க்கு இடையூறு செய்து வாழ்கின்ற மடையர்கள் என்றும் கடையரே.

வளம் மிக்க இந்நில உலகில் கோடிக் கணக்கில் குவித்து வைத்து அதனால் அவன் ஈசுவரன் என்று பாராட்டப்படுகிறான். நாடி வரும் ஏழையரைக் கண்டால் அவன் கை முடங்குகிறது; குறைகிறது. அழுங்குகிறது. அவன் ஒரு நோயாளி ஆகிறான். இவனா செல்வன்! தரித்திரம் படைத்தவன்; நித்திய தரித்திரன்; பணம் படைத்த பரம ஏழை; இவன் கோடியில் ஒதுங்கிக் கிடக்க வேண்டியது தான். அதே நாலு முழம் வேட்டி; உண்பது நாழி, அவன் ஏழைதான். இல்லாதவன்தான், அவனிடம்