பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

137


மேல்தரமான புகழை அழித்து வாழ்வது வெட்கப்பட வேண்டியதாகும்; ஒரு சில குறைகள் இருக்கலாம்; மொத்தமே ஒட்டை என்றால் அந்த வாழ்வு மதிக்கத்தக்கது அன்று. அடியோடு ஆட்டம் கொடுத்தால் அதை உலகம் மன்னிக்காது. மானம் கெட்டவன் என்று தான் முடிவு செய்யும். அங்கு ஒன்று இங்கு ஒன்று கிழிச்சல் என்றால் அது கந்தல் துணி என்பர். அதுவும் மானத்தைக் காக்கும்; மொத்தமே கழிச்சல், உதவாது என்றால் அதைத் தூக்கி எறிவது தவிர வேறு வழியில்லை; அவர்களை மானம் உடையவர் என்று கூற இயலாது.

மதம் மிக்க யானை அதனைக் காட்டு வேங்கைப் புலி அடித்து வீழ்த்துகிறது; அஃது இடப்பக்கம் விழுந்தால் வேங்கை தன் வலிமைக்கு இழுக்கு என்று அதன் இறைச்சியைத் தொடாது; பசி எடுத்தாலும் அதனைச் சுவைக்காது; செத்து மடியுமேயன்றிச் சத்து அற்ற அந்தச் செத்தையைக் கருதாது. சுவை குன்றிய உணவாக அது மதிக்கப்படும்; “வீரம் குறைந்தது தோல்விக்குத் துவண்டது” என்று அந்த யானை கருதப்படும்.

யானை மிகப் பருத்த ஒன்றுதான்; அதை மிச்சம் வைத்து உண்டாலும் நாலு வாரம் தின்னலாம்; எனினும் அதைத் துச்சமாக மதிக்கிறது வேகம் உடைய வேங்கை அதே போல மானம் உடையவர் விமானம் மீது ஏறி இந்த உலகத்தையே வளைப்பதாயினும் தம் நிலையில் தாழ்ந்து அதனைப் பெறார். வானமே தம் காலில் வந்து விழுந்தாலும் அதனைத் தானமாகப் பெறார்; ஞானவான் களாக வாழ்வர்; நிதானம் தவறமாட்டார்கள்.