பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


வேண்டியது. அதைச் சிந்தித்துப் பார்க்கச் சீர்மை இல்லை. இது ஒரு விஞ்ஞான உண்மை; சில உந்துதல்கள் காரணம் ஆகின்றன. “இல்லாமை” அவனை வந்து நெருக்குகிறது. என் செய்வான்? படித்தவன்தான், பண்பாளன்தான், அறிந்தவன்தான், வேறு வழி இல்லை தாழ்ந்து விடுகிறான். கூனிக் குறுகி அவன் உன்முன் வந்து நிற்கிறான். ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும் அவன் மனம் இடித்து உரைக்காமல் இல்லை. இதை உணராமல், ‘இல்லை’ என்று ஒரே சொல்லில் அவனை அனுப்ப நினைக்கிறார்கள்! என் செய்வான்? அவன் எப்படி வாழ்வான்? உயிர் அதனைப் போக்கும் சுருக்குக் கயிறு; அந்த மறுப்புச் சொல் பொறுப்பற்ற செயல்; கொலைஞர்கள் இவர்கள்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை தெரியுமா? ஒருவன் முந்திக் கொண்டான். தங்க நாணயங்கள் சேர்த்துக் குவித்துக் கொண்டான். அடுத்த வீட்டுக்காரன் அவன் பிந்திச் சென்றான். கால் கை பிடிபட்டு உதைபட்டான். அவரவர் அதிருஷ்டம் அது. வாய்ப்புகள் சிலரை வாழ வைக்கின்றன. சிலரைத் தாழ்த்துக்கின்றன. ஏழையும் வாழ்கிறான். செல்வனும் வாழ்கிறான். ஏறக்குறைய ஒருவனுக்கு ஒருவர் உதவி செய்து கொண்டுதான் வாழ வேண்டும். இல்லாதவர் இருப்பவனைக் கேட்டுப் பெறுவது தவறாகாது. அவசியம்; இதில் ஆவேசப்படத் தேவை இல்லை. அவசரத்திற்கு உள்ளவனைக் கேட்பது இழிவு அன்று: ஆனால் அந்த மடையன் அதை உணர்வது இல்லை; ‘ஈக’ என்று கேட்டுவிட்டாலே ஈனமாகப் பார்க்கிறான். செல்வச் செருக்கு அவன் ஆணவத்தைத் தூண்டுகிறது;