பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


அறிவு நாடி அணைதல் மிகவும் குறைவு. தப்பித் தவறி முரடர்கள் மேடை ஏறிவிட்டால் கரடுமுரடாகப் பேசிக் கூட்டத்தைக் கெடுத்துவிடுவர். அவையை அடக்கி அமைதி காத்து அழகாகப் பேச வழிவகுப்பதே கற்றோர் அவை; எனவே அவை அறிந்து நாடுக அறிவு தேடுக.

எந்த அவையாக இருந்தாலும் யாரும் பேசிவிட முடியாது. பஞ்சாயத்துக் கூட்டம் என்றாலும் வரன்முறை உண்டு; பண்ணையார் பேசுகிறார் என்றால், மற்றவர்கள் திண்ணையராக அமர்ந்திருக்கமாட்டார்கள். கேள்விகள் தொடுப்பார்கள். பிறரைப் பேசவிட்டுக் கருத்துக்களைத் திரட்டி எதிர் புதிர்களை எடுத்துக்காட்டித் தீர்ப்புகள் செய்வது தக்கது ஆகும். ஊருக்கு வேண்டிய நன்மைகளை நயமுடன் பேசித் தீர்மானங்கள் முடிக்க வேண்டும். கூட்டத்தில் குழப்பம் விளைவித்துத் தம் பண வலிமை. ஆள் வலிமை காட்ட முனைவாரும் உளர்; அவர்களை அங்குப் பேச இடம் தரக்கூடாது. இவை நடைமுறையில் கொள்ளத்தக்கன.

உள்ளீடு இல்லாதவர்கள்; சுயசிந்தனை இல்லாதவர்கள் தம் அறிவால் விளக்கம் தர முடியாதவர்கள் தம் ஆசிரியர்களின் பெருமையைப் பேசி அந்த ஒளியில் குளிர் காய்கிறார்கள். இவர்கள் பட்டம் வாங்கியவராக இருக்கலாம். ஆனால், சுய சிந்தனை, சுய அறிவு எதுவுமே இல்லாதவர்கள். ஒரு சிலர் திருக்குறளை ஒப்புவிப்பார்கள். நூல் பல கற்றவர் என்பது விளங்கலாம். ஆனால் அவர்களை நுண்ணறிவு உடையவர் என்று கூற இயலாது. இவர்கள் கற்றவர்கள் என்று கூறிக் கொள்ளலாம்; அறிவாளிகள் ஆகார்.