பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



அருமையான நூல்; அதை விவரித்து அதில் உள்ள விழுமிய கருத்துகளை எடுத்து உரைக்கக் கற்றவர் அழைத்தால் மற்று அதனைச் செவி மடுக்க அஞ்சுகிறான். கருத்துள்ள செய்திகளை எடுத்துச் சொன்னால், “அவை தேவை இல்லை” என்கிறான். “தூக்கம் வருகிறது என்னை விட்டு விடுங்கள்” என்று கூறித் தப்பித்துக் கொள்கிறான். அதிகமாகப் பேசினால் அவன் வம்புக்கு இழுத்து வாதங்கள் புரிகிறான்; “மேலோர் கூறிய கருத்துக்கள் எல்லாம் தீயவை” என்று கூறுகிறான். “மக்களை அடிமைப்படுத்த மடையர்கள் எழுதியவை” என்று வாதாடுகிறான். “வேலை வெட்டி இல்லாத புலவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதியவை எல்லாம் இன்று நூல்கள் என்று படிக்கிறார்கள். இவர்கள் எழுத்து மகிழ்ச்சியை மட்டுப்படுத்துவன; இன்பமாக வாழவழி கூறாதவை” என்று வாதிடுகிறான். “காம சாத்திரம் தந்தால் அதைத் தான் படிக்கத் தயார்” என்று கூறுகிறான். தனக்கு அத்தகைய நூல்களே பிடிக்கும் என்று கூறுகிறான். வாயைத் திறந்தாலே உப்பங்கழி நாற்றம் வீசுகிறது. என் செய்வது?

சில சமயம் எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ செல்வம் வந்து குவிந்துவிடுகிறது. அதனால் வாழ்க்கைத் தரம் மாறிவிடுகிறது. நேற்றுவரை கலகலப்பாகப் பழகியவன் இன்று சலசலப்புக் காட்டுகிறான் பேசுவதற்கு நேரம் இல்லை ‘நேரம் இல்லை’ என்று சொல்லிவிட்டுப் போகிறான்; மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், “புதுப் பணக்காரன் அப்படித்தான் இருப்பான்” என்று விமரிசிப்பதைப் பார்க்கிறோம். பணக்காரர்களில் இருவகை உண்டு என்று தெரிகிறது.