பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

185


விட்டது. மாலை மயக்கத்தில் அவள் உழன்று வருந்தி அலமருகின்றாள். என் செய்வது? ஆற்றுவது என்பது இயலாத ஒன்று; அவர் வருகைதான் மாற்றம் செய்ய இயலும் அதுவரை? இப்படித்தான் மாலைப் பொழுதுகள் மாலை தந்து அந்த மாலாவை அழச் செய்து கொண்டுதான் இருக்கும். அவள் மட்டுமா? கன்னிப் பெண்கள் கதைகளைக் காவியத்தில் தீட்டினால் இந்த அழுகை என்பது அழியாத அத்தியாயம். பிரிவு அது பாலை; அவர் வந்து சேர அவள் காத்திருக்கிறாள் அதனால் அது முல்லை; வேறு வழியே இல்லை;

தலைவன் தலைவியின் பிரிவுக்கு வருந்துதல்

காலையரும்பிப் பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் மங்கையின் காதல் நோய்; கதிரவன் கால் சாய்க்கின்றான். அதிரவரும் மாலைப் பொழுது கண்டு அவள் கண்கள் நீர் நிறைகின்றன. அவள் தன் மெல்லிய விரலால் அதனைச் சிதற அடித்துத் தனிமையில் பதறுகின்றாள். மோனம் அங்குக் குடி கொள்கிறது. விம்முகிறாள்; அவள் குரல் கம்முகிறது. கும்மிருட்டு வந்து குவிகிறது. இதற்கு எல்லாம் காரணம் என்ன? வருகிறேன் என்று குறித்த நாளில் யான் அங்குச் செல்ல இயலவில்லை. அவள் தோள்மேல் தன் கை வைத்து உறக்க மின்றி இரவு கண் விழித்து என் குற்றத்தையே அவள் எண்ணுவாளோ என் செய்வது? வினை முடிந்ததும் வீடு திரும்ப விழைகின்றேன். நான் வரும் நாள் எண்ணி விரலைச் சுவரில் தேய்த்து நாட்குறி வைக்கிறாள். அவள்விரல் தேய்கிறது. என்னை எதிர்பார்த்துப் பார்த்து அவள் விழிகள் ஒளி இழக்கின்றன.