பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க-அற்றம்
மறைக்குந் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார். 78

இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்கு இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை. 79

தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க-வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல். 80

9. பிறர்மனை நயவாமை


அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால்-நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார். 81

அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா-பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி-பாவம்என்று
அச்சத்தோ டிந்நாற் பொருள். 82

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல். 83