பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

207



அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல்-வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும். 108

ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது. 109

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு. 110

12. மெய்ம்மை


இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை-நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து. 111

தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்: அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு. 112

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர்; ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர். 113