பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

211




பொருட்பால்
14. கல்வி

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. 131

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து. 132

களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்
தலைநிலைத்து வைக்கப் படும். 133

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற. 134

கல்வி கரையில; கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல;-தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. 135