பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

63


கொன்று தோல் வேறு உடல் வேறு என்று பிரித்துப் பார்க்கின்றனர். அதன் அங்கம் தொழுநோயாளியைப் போல் காட்சி அளித்து அச்சுறுத்தவில்லையா? அடுத்த பிறவியில் சங்குபோல் வெளுத்துக் கைவிரல்கள் உளுத்து அவர்கள் தொழுநோயாளியாக மாட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? அறிவாளிகள் இந்தக் கொடுமையைச் சிந்தித்துப் பார்ப்பார்களா? உயிர்க் கொலை தீவினை; அதனைச் செய்வதற்கு அஞ்சுக; பாவ வேட்டையைச் சுமக்க எண்ணுபவர் இத்தீவினை ஆற்றுவர். கொல்லான் புலால் மறுத்தவனை இந்த உயிர்கள் எல்லாம் தெய்வமாகத் தொழும். அவற்றை வாழவிடுக! அவற்றிற்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு.

அடுத்தது தீயவர் நட்புக்கு அச்சம் காட்டுதல் தேவைப்படுகிறது; பால் போல் வெளுத்து இருந்தான் முன்பு, இப்பொழுது அவன் புளித்துத் தயிராகிவிட்டான். காரணம் புரைமோர் பட்டதும் பால்திரிந்து தயிராகி விடுகிறது. நெய் குளிர்ச்சி உடையதுதான். அது சூடான நெருப்பில் பட்டால் அதுவும் சூடு ஆகிறது; தொட முடிவது இல்லை. நல்லவர் கெட்டவர்களோடு சேரும் போது அவர் புளித்த தயிராகவும், சுட்ட நெய்யாகவும் மாறி விடுகின்றனர். இதை வைத்து அவர்கள் இன்னார் என்று குறிப்பிடுகின்றனர். நிலத்தியல்பால் நீர் திரிகிறது. தீயவர்களோடு நல்லவர்கள் சேர்ந்தால் நல்லவர்களும் தீயவர் ஆகிவிடுகின்றனர்.

“சேரிடமறிந்து சேர்” என்பது பழமொழி; பெருமை உடையவர்களுடன் சேர்வது பெருமை தரும்; அஃது அவனை உயர்த்தும்; வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்; ஒளி பெற்றுத் திகழ்வான்; அந்த நட்பு