பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நாலடியார் செய்யுளும் செய்திகளும்




பொருட்பால்
14. கல்வி கரை இல
(கல்வி)

கல்வி என்பது யாது? நடுவு நிலைமை கெடாமல் ஒழுகும் நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது; அதுதான் கல்வி; மகளிர் தலைவாரிப் பூச்சூடி புனைந்து கொள்வதும்; விலைமிக்க பல நிறத்துக் கரை போட்ட சேலை உடுத்திக் கொள்வதும், ஆடவர் நெஞ்சம் கவர முகத்துக்கு மஞ்சள் பூசிக் கொள்வதும் அழகு என்று பேசலாம்; அவை புறத்துக்கு அழகு செய்வன ஆடை அணிகள் உள்ள அழகைக் கூட்டுமேயன்றிப் புது அழகை ஊட்டாது; கல்வி அக அழகைத் தோற்றுவிக்கும். அறிவு ஒளிவிட, நீதி மிக, நடுவு நிலை பெருக, அவர்கள் நல்லவர்கள் என்று நாலு பேர் நவிலக் கல்வி அழகே அழகு.

இந்த உலக வாழ்வுக்குக் கல்வி கண் போன்றது; எதையும் சாதிக்கும் அரிய கருவியாகும்; இருட்டைப் போக்கும்; ஒளியாக்கும்; எல்லா நன்மைகளையும் தரும்; ஈயக் குறையாது; அதைப் பிறர்க்குக் கற்பிக்க அது மேலும் பெருகுமே தவிரச் சிறுகாது; பிறருக்குச் சொல்லும்போது அவர்கள் எழுப்பும் ஐயம்; அதை மையமாகக் கொண்டு எழும் வினாக்கள்; அவற்றிற்குக் காணும் விடைகள்; அவன் மறுத்துச் சொல்லும் தடைகள் இவை உள்ளொளி பெருக்கி உயர்வு அளிக்கும்.