பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


நின்று பேதிக்கவில்லை. படகோட்டி தொழிலால் கடத்தல்காரன்; அவன் ஒடத்தைச் செலுத்திப் பிறரைக் கரை ஏற்றுகிறான். ஞான குருக்களும் அத்தகையவரே. யார் ஆசிரியன் என்று பேதம் பாராட்டத் தேவை இல்லை; கரை ஏற்றும் ஆற்றல், தொண்டு, பணி, திறமை இவை இருந்தால் அவனை ஆசிரியனாகக் கொள்வர். கல்வி ஆசான் சாதி பற்றி மதிக்கப்படுவது இல்லை; கற்ற கல்விபற்றிப் போற்றப்படுகிறான்.

தேவர் உலகத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? கேளிக்கைக் கூத்தில் அவர்கள் களிப்புக் காண்கின்றனர். அரம்பையும் ஊர்வசியும் ஆடிக்கொண்டே இருக்கின்றனர்; அவர்கள் பேரழகினர்; கலைநுட்பம் வாய்ந்தவர்கள்; அங்கே அழகுச் சுவை இருக்கலாம்; அறிவு ஒளி அங்கு எங்கே இருக்கிறது? இதைக் காட்டித்தானே தேவர் உலகம் சிறந்தது என்பர். இங்கே பட்டி மன்றங்கள், இலக்கியச் சொற்பொழிவுகள், ஆய்வுக் கழகங்கள், அறிவு ஆராய்ச்சிகள் இவை சொல் விருந்துகள்; கற்ற புலவர்கள் உரையாடல் கவின் உடையது; சுவைபடப் பேசுவது இனிமை தருகிறது. இரட்டுற மொழிந்து சொல் நயம் விளைவிப்பர்; கவிநயம் காட்டிக் களிப்புறச் செய்வர். கவிஞர்கள் பாடி வைத்த பழம் புதையல்களை நாடி எடுத்துப் பொருள் கண்டு, தகைகண்டு, சொல்நயம், பொருள் பயன், அணி நலம் இவற்றைப் புலவர்கள் காட்டுவர். இவர்கள் கூடிப் பேசிப் பிரிந்த பிறகும் அவர்கள் பேச்சுகள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து மகிழ வைக்கின்றனர். கவிதை கற்கண்டு; அதன் சுவை கண்டு மலரை நாடும் வண்டு எனச் சுழல வைக்கின்றனர். அவர்கள் எந்தக் களங்கமும் இன்றிக்