பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


நுழைபுலம் என்பர். அவர்கள் கல்வி கற்றதோடு நில்லாமல் நுட்பமான அறிவு படைத்தவராகத் திகழ்வர். மற்றவர்களையும் பேச வைத்து, அல்லது எழுத வைத்து நூல்களைப் படைக்க வைத்துக் கற்றவர்கள் ஊக்குவிக்க வேண்டும். அறிவு மிக்க எழுத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். “நாரும் மலரைச் சார்ந்து மணம் பெறும்” என்பர். மலரைப் பிணித்துக் கட்டி வைக்கும் நார் தானும் மணம் பெறுகிறது. மலர்களைச் சிதறாமல் சேர்த்துக் கட்டுகிறது. மாலை கவின் பெறுகிறு. கல்லாதவரைச் சார்ந்து ஆள்க; அவர்களும் கல்வி அறிவு பெற்றுத் திகழ்வர்.

‘நூல் பல கல்’ என்றால் அவன் திரைப் பாடல்களை மனப்பாடம் செய்கிறான்; காதல் போதை தரும் கவிதை களை அறிவு நூல் என்று வேதம்போல் பயில்கிறான். மன அழுக்குப் போக வள்ளுவம் கற்றால் பயன் உண்டு. ‘ஓடிப் போனவள்’ என்பவளின் ஓட்டத்தில் நாட்டம் வைத்தால் பயனில்லை. அறிவு வாணர்கள் என்று சொல்லிக் கொண்டு அற்ப விஷயங்களை எழுதுகிறார்கள்; அவ் எழுத்துக்களைப் படைப்பு நூல் என்று பறை சாற்றுகின்றனர். இவை எல்லாம் எழுத்து ஆகா. தினவுக்குச் சொரிந்து கொடுப்பதாகும். சிந்தனையைத் தூண்டும் சீரிய எழுத்துக்களைப் படித்தால் பயன் உண்டாகும். அவை காலத்தை வென்று ஞாலத்துக்கு ஒளி தந்து கொண்டே இருக்கும். காக்கை கத்தல் கர கரப்பு ஆகுமே தவிர அது ‘கர கரப்பு ராகம்’ ஆகாது. திரை இசைப் பாடல்கள் ‘கிலுகிலுப்பை’ என்று தான் கூறமுடியும்; நூல் சில கற்றாலும் நுண்ணறிவு தரக்கூடிய பண்ணமைப்பு அவற்றினுள் இடம் பெற்றிருக்க வேண்டும்.