பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


கிடப்பது இல்லை; பிறர் துயரைக் கடிந்து நீக்கி வாழ முற்பட்டுச் செயலாற்றுவர்.

மான்குட்டி மான்குட்டிதான்; அதற்குச் சேணம் பூட்டினாலும் அது குதிரையாகாது. புல்லைத் தின்பதில் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை; போர் என்று முனைந்து அவசரத்துக்கு மானைத் தேரில் பூட்டினால் அது ஏன் என்று கேட்காது; தின்னத்தான் தெரியுமே தவிர வேறு எதையும் பண்ணவே தெரியாது. சப்பாணிகள் பலர் இருக்கிறார்கள்; பணம் படைத்தவர்கள் பலர் உள்ளனர்; குணம் படைக்க வேண்டாமா? அவர்களை அடைந்து ஓர் உபகாரம் என்று கேட்டால் ‘வேறு இடம் பார்’ என்று கைவிரித்து நிற்பார்கள். உபகாரிகள் பை விரித்துத் தருவார்கள். இதுவே நற்குடி பிறந்தவரின் நற்செயல் ஆகும்.

கோடையில் ஆற்றுநீர் வற்றிவிட்டால் மணல் ஊற்றில் கை வைத்தால் நீர் வேட்கை தீரும். அடிசுடும் அந்நாளிலும் நீர் ஊற்றுப் பொய்க்காது; அதுபோல் வறுமை உற்று அவர்கள் வாழ்வு நொடிந்து விட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு அடைக்கமாட்டார்கள். உள்ளதைத் தந்து அதற்குமேல் தர இயலவில்லையே என்று வருந்தி விடை தருவார்கள்.