பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


இவனை மற்றவர்கள் செவிடன் என்று பேசும் அளவிற்கு மற்றவர்களின் வாழ்க்கையை விமரிச்சிக்கக் கேட்க வேண்டாம்.

பக்கத்து வீட்டுக்காரன் தன் மனைவியைத் தினம் அடித்துத் துன்புறுத்துகிறான்; ‘அடி தடி’ காதில் போட்டுக் கொள்ளாதே. அவனைச் சந்திக்கும்போது கேட்டுவிடாதே. கேட்டால் அவன் என்ன கூறுவான்? “உன் மனைவியை நீ அடித்துக் கொள்; நான் கேட்கவில்லை” என்பான். “அவள் என் உடைமை; அவளை அடிப்பதற்கு எனக்கு அதில் ஒரு மகிழ்ச்சி, உன்னை அடித்தால் வந்து கேள்” என்பான்; கல்லை அறைவானேன் கைநோவு என்று கூறுவானேன். மற்றான் மனைவி அவளை உற்றுப் பார்ப்பதைத் தவிர்க. இந்த வகையில் நீ குருடனாய்ச் செயல்படுக; அவளைப் பார்த்தால் என்ன பயன்? அவள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிடுவாள். “எதிர் வீட்டுக்காரர் நான் சேலை அழகாகக் கட்டிச் சென்றால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; உறுத்து உறுத்துப் பார்க்கிறார்” என்று தன் கணவனிடம் முறையிடுவாள். அவன் உடனே ரோஷம் பொத்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான். “என் மனைவியை நீ ஏன் முறைத்துப் பார்த்தாய்?” என்று கேட்டான். “அழகாக இருக்கிறாள்; அதனால் அவள் என்னைக் கவர்ந்தாள்” என்றால் அவன் கேட்பானா? பக்கத்து வீட்டுக்காரி எப்படி இருந்தால் உனக்கு என்ன? குருடாக இருந்துவிடு; பிரச்சனையே வராது; உன் வீட்டுக்காரியும் சும்மா இருக்க மாட்டாள். “என்னைவிட அவள் எந்த வகையில் அழகு?” என்று வினாத் தொடுப்பாள். இதற்கெல்லாம் விடை தேடிக் கொண்டிருக்க முடியாது.