பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

83


மற்றொன்று புறங்கூறிப் பொய்த்து நகை செய்யாதே. நண்பன் இருக்கும்போது நகைபடப் பேசிவிட்டு அவன் சற்று மறைந்ததும் அவன் குறைகளை மிகைபடப் பேசுவது இழிவு ஆகும். அதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு யாக்கையை விட்டு விடலாம். வாழவே தேவை இல்லை. புறங்கூறுவது கெட்ட பழக்கம். அதனால் அந்த வகையில் ஊமையாகச் செயல்படுக; மற்றவர்கள் வாயைக் கிளறுவார்கள்; நீ ஏதாவது உளறுவாய். ஐம்புலன்களை இறைவன் அளித்தாலும் சிலவற்றைச் செயல்படாமல் வைத்துக் கொள்வது நல்லது; செவி, நாக்கு, வாய் இந்த மூன்றும் ஒலிக்கருவிகள்; இவற்றைக் கட்டுப்படுத்து; இரைச்சல் செய்யாமல் பார்த்துக் கொள்; இனிமையான பண்ணிசை கூட்டு; இந்த இழி இசை தள்ளிவிடு; இதுவே உயர்வதற்கு வழியாகும்.

சிலபேரைச் சில நேரம் மட்டும் பார்த்தால் போதும்; அடிக்கடி வந்தால் அவன் ஏதோ உதவிக்கு வருகிறான் என்று இகழ்ந்து பார்ப்பார். மேலோர் எத்தனை முறை சென்றாலும் முகம் இனிக்க வைத்து அகம் நகைக்க வைத்து உறவாடுவார். அவர்களைப் பார்த்து அணுகுதல் செய்க; மதியாதார் வாசல் மிதிக்கவேண்டாம் என்பது தொல் மொழி; அதை மதித்து நடந்து கொள்க.

கோடிக் கணக்கில் பணம் குவித்துவிட்டான்; அவனை அடைந்தால் கேடு இல்லை என்று கருதலாம். அவன் சமூக விரோதி, பிறர் அடைய வேண்டிய பொருளை ஒருவனே குவிக்கிறான். அவன் மனம் உவந்து பிறர்க்கு எந்த உதவியும் செய்யமாட்டான். வசதி உடையவன் என்பதால் உன் அசதிகளை அகற்றுவான் என்று கருதிவிடாதே.