பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

இன்முகம் காட்டி நல் விருந்தா தரப் போகிறார்கள் : சலசலத்த புடவையுடன், கல கலத்த பேச்சில், மல மலத்து இருக்கப் போகிறார்கள். நீ வெல வெலத்து வெளியேற வேண்டியது தான். உள்ளம் உவந்து தருபவரே கள்ளம் தவிர்ந்தவர் ஆவர்.

பொருளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்கிறான் ? பொம்மலாட்டம் ஆடுகிறான்; தானும் மனம் வந்து உண்ணான், வயிறுக்கு வாய்தா போடுவான் ! துறவிகள் பாவம் உறவு யாரும் இல்லாதவர். சோறு ஒன்றுதான் அவர்கள் உலகத்துப் பற்று. பசி ஒன்று தான் அவர்களை வசிக்கச் செய்கிறது. அவர்கள் மதுவோ மங்கையோ வேட்டு மகிழ விரும்புவதில்லை. சோறு கைப் பிடி சோறு; அதற்கும் கெடுபிடி, அவன் நாலு வீடு நடந்தால்தான் அவன் அட்சய பாத்திரம் நிச்சய பாத்திரம் ஆகிறது. அவர்கள் இல்வாழ்க்கை நடத்தும் நல்லோரை நம்பித்தான் வாழ்கின்றனர். அவர்களையும் கவனிக்காமல் சேர்த்துவைத்துச் செத்துப் போனால் பின் அந்தச் செல்வமே அவனைப் பார்த்துச் சிரிக்கும். இந்த உலகம் அவனை எள்ளி நகையாடும் அதனால் செல்வர் பலருக்கும் பயன்பட வாழ்ந்து அதில் மகிழ்வு காண்க.

இடுக்கண் தீர்க்காது ஒடுக்கி வைத்த செல்வம் அவனா அனுபவிக்கப் போகிறான்? அஃது மகனுக்கு அவன் போற்றி வளர்க்கும் மகளுக்கு ஆகிறது. மகள் வளர்க்கத் தக்கவள்; கன்னிப்பருவம் வந்ததும் அந்நியன் அவளை இழுத்துச் சென்று கழுத்தை நீட்டு என்று தாலி கட்டி வேலி இடுவான். அனுபவிக்கத் தெரியாதவர்; அதற்கு என்று ஒருவன் வந்து அள்ளிக் கொண்டு போகப் போகிறான்; இவர் வாயைப் பிளந்துகொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.