பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

காசு நாலு இல்லை என்றால் சுற்றமும் சூழார்; சொந்தம் பந்தம் எல்லாம் தலைகாட்டாது. பண்டம் இல்லை என்றால் வீடு சுத்தமாக இருக்கும். ஈமொய்க்காது. வரப்போக யாருமே இல்லை; காரணம் பருக நீரும் கிடைக்காது என்பதால் அருகே வரமாட்டார். தரித்திரம் எந்தச் சரித்திரமும் படைக்காது.

காசு இருக்கும்போது காக்காய்க் கும்பல் நம் வீட்டைச் சுற்றி வட்டமிடும்; திட்டமிடும். இல்லாத நோயைப் பற்றித் துருவித் துருவிப் பேசி நலன் விசாரிப்பர். “அப்பா சுகமா? அம்மா நலமா?” என்று கேட்பார்கள். காசு இல்லை என்றால் தூசு துடைக்கவும் ஆள் வரமாட்டார்கள். “கால்துரசும் பெறமாட்டான்” என்று அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டார்கள்.

“வண்டாய்ப் பறந்து வாழ வழி அறியாமல் வாடினால் கண்டுகொள்ளவே யாரும் வரமாட்டார்கள். அதிகாரமும் அப்படித்தான். நேற்று அவன் அரசு அதிகாரி. இன்று கோயில் பூசாரி, பொழுது போகவில்லை; கோயிலைச் சுற்றி வருகிறான். குங்குமப்பொட்டு அவன் நெற்றியில் ஒலமிடுகின்றது. அந்த வீடு வெறிச்சிடுகிறது. எல்லாம் இருந்தால்தான் விருந்தினரும் சுற்றத்தாரும்.

இல்லாமை என்ற நிலை ஏற்பட்டால் பிறந்த குலப் பெருமை மாயும்; பேராண்மையும் சாயும் ; கல்வியும் ஒயும். எதுவுமே ஒளிவிடாது; யாருமே அவனைப் புகழ்ந்து பேசார். எல்லாம் மங்கிக் கிடந்து செயலிழந்து தன்னை மறந்து வாழ வேண்டியதுதான்.