பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


நடிக்கிறான். "ஐயோ பாவம் நல்லவர்களுக்கே காலம் இல்லை; நீ யாருக்கும் எந்தக் கொடுமையும் செய்தது இல்லை; உனக்கா இந்தத் தாழ்நிலை. உள்ளபோது கேட்டவர்க்கு எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்தாயே! உனக்கா இந்தத் தாழ்வு? பாவம்! கிழிந்த வேட்டி குழிந்த வயிறு மெலிந்த தேகம் இந்தத் தரித்திரம் மிகவும் கொடுமை! வறுமை மிகவும் கொடியது. நெருப்பிலும் தூங்கமுடியும்; இந்த வறுமையில் நிம்மதி இழக்க வேண்டியதுதான்" என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறான். இந்தப் போலிகளை நினைத்தால் நெஞ்சம் குமுறத்தான் செய்கிறது. கொல்லன் உலைக்களத் தீ போலப் பற்றி எரிகிறது. இந்தச் பச்சோந்திகள் பகல் வேடக்காரர்கள்; இவர்கள் செல்வர்கள் ; வெட்கம்; வெட்கம்; வெட்கம்.

அவன் கேட்கிறான்; கொடுக்கமுடியவில்லை; அதற்காக வெட்கப்படத் தேவை இல்லை. பிறரை ஏமாற்றிப் பிழைக்கிறாய்; அஃது உன் தொழிலாகிவிட்டது, ஊர் பழிக்கிறது. அதற்கும் அஞ்சவில்லை. அதற்காகவும் வெட்கப்படத் தேவை இல்லை. மொத்தத்தில் தன் குடிப் பெருமை கெடக் கூடிய நிலைக்குத் தாழ்ந்து போவது இழிவாகும். கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து மேல்தரமான புகழை அழித்து வாழ்வது வெட்கப்படவேண்டியதாகும்; ஒரு சில குறைகள் இருக்கலாம்; மொத்தமே ஒட்டை என்றால் அந்த வாழ்வு மதிக்கத் தக்கது அன்று. அடியோடு ஆட்டம் கொடுத்தால் அதை உலகம் மன்னிக்காது. மானம் கெட்டவன் என்று அப்பொழுதுதான் முடிவு செய்யும், அங்கு ஒன்று இங்கு ஒன்று கிழிச்சல் என்றால் அது கந்தல் துணி என்பர், அதுவும் மானத்தைக் காக்கும்; மொத்தமே கழிச்சல், உதவாது என்றால் அதைத் தூக்கி எறிவது தவிர வழியில்லை; அவர்களை மானம் உடையவர் என்று கூற இயலாது.