பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155



காட்டு யானை அதன் தந்தம் அழகு உடையது; கூர்மைமிக்கது; வலிவுடையது வீட்டுப் பன்றி அதனை ஏன் காட்டு யானைபோல ஆக்கக் கூடாது என்று ஒரு அறிவாளி நினைத்தானாம். அவன் என்ன செய்தான்? வைரக் கற்களைப் பதித்து ஒரு பூண் செய்து அதற்கு மாட்டினான். அப்பொழுதும் அது யானைபோல் ஆக முடியவில்லை. அதன் கம்பீரம் இதற்கு எப்படி வரும்? இது சகதியைத் தேடிக்கீழ்மையில் வாழ்கிறது; மட்டமான மனிதர்களை எவ்வளவு கூர்மைப்படுத்தினாலும் அவர்கள் தம் திட்டங்களில் இருந்து மாறுவது இல்லை. தம் இட்டமான செயல்களையே செய்து சீர் அழிவர் ; பேர் கெடுவர். ஊரார் இகழ்வர். இவர்கள் வாழ்வு கசப்புமிக்கது, கயமை உடையது ஆகிறது.

தாமரை இலை நீருக்குள்ளும் அமிழாது, தன் எல்லைக்கு மேலும் நீளாது. 'நீரளவே ஆகுமாம் நீராம்பல்' என்பது பழைய பாட்டு இந்தத் தாமரை ஒரு நிலையில் நிற்காது. தளர்ந்து கொண்டே இருக்கும். தண்டு ஊன்றி நிலைபெறலும் செய்யாது. அப்படியே அழிந்துபோக வேண்டியதுதான். ஒரு சிலர் இப்படிப் பகற்கனவு கண்டு கொண்டே வாழ்க்கையை நடத்துவர். 'இப்படிச் செய்தால் லட்சங்கள் வரும்; அப்படிச் செய்தால் லட்சியங்கள் நிறைவேறும்' என்பர். இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோட்டை கட்டுவர். ஒரு சிறு துரும்புகூட எடுத்துப் போடமாட்டார்கள். இதைப் போலவே காலமெல்லாம் பேசிக்கொண்டு எந்த அளவும் உயரமாட்டார். உள்ள நிலையிலேயே இருந்து தேய்ந்து விடுவர். கசப்புமிக்க வாழ்வு; பிறரை ஏமாற்றிக் கொண்டே காலம் ஒட்டுவர். லட்சங்கள் வரும் என்று சொல்லிக்கொண்டே தாம் பிறர் மதிக்க வாழ்வர். இவர்களும் கயவர்களே, -