பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156



நெட்டி இருக்கிறதே அது கெட்டியான பொருள் அன்று. தக்கை என்றும் கூறுவர். அது நீரில் வளர்வது தான்; மேற்பகுதி கூடப் பசுமை பெற்று இருக்கும். அடிப்பகுதி பசையற்று வறட்சியாக இருக்கும். அதுபோலப் பலர் ஈவு இரக்கம் காட்டாமல் கல்நெஞ்சு உடையவராக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். வசதிகளுக்குக் குறைவு இல்லை. நினைத்தால் மற்றவர்களுக்கு உதவலாம். ஆனால் உதவமாட்டார்கள். கேட்டால் அவர்கள் தங்களுக்கு உள்ள கஷ்டங்களை விவரித்துக் கூறுவர். ஊதாரித்தன மான செலவுகள் செய்வர். தன் சொந்த நலனுக்கு எது வேண்டுமானாலும் செய்துகொள்வர். மனைவியையும், வீட்டையும் அலங்கரிப்பர். மற்றவை அவர்களுக்குப் பொருட்டு அல்ல. கடின சிந்தையர்; கயவர் இவர்.

37. கதம்பப் பூக்கள்

(பன்னெறி)

அழகான வீடு; தோட்டம்; எடுபிடி ஆட்கள் எல்லாம் இருக்கின்றன. என்றாலும் அது ஏன் அந்த வீடு சோகக் காட்சி அளிக்கிறது? இஃது என்ன சுடுகாடா? மனித வாசனையே இல்லை, இந்த வீட்டு மகாலட்சுமி எங்கே? எல்லாம் இருக்கிறது; வீட்டைப் பராமரிக்க ஒரு கிருக லட்சுமி இல்லை; மனைவி இல்லாத வீடு அது அரண்மனையாக இருந்தாலும் அது வெறிச்சிடத்தான் செய்யும். நண்பர்கள் மட்டும் இருந்தால் அது சகவாசம், மனைவி இருந்தால்தான் அது சுகவாசம்,