பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167



கணவனின் கூற்று

நாணம் மிக்கவள் அவள்; என் நா அவள் நலம் எடுத்துரைக்கிறது. உள்ளத்தில் காதல் உணர்வு உடையவள்; நூல் கற்ற அறிஞர்களின் பேரறிவாக அவள் திகழ்கிறாள். வள்ளல்கள் வாரி இறைக்கும் ஒண்பொருளாக உயர்கி றாள். இன்பத்தை அள்ளித் தருகிறாள். வீரனின் கை வாளாகக் கூர்மைமிக்கவள்; எதையும் திறம்படச் செய லாற்றுகிறாள்.

பாணனும் தலைவியும் உரையாடுதல்

பாணன் ஒருவன் தலைவியை நாடிச் சமாதானம் செய்விக்க வருகிறான். அவன் பாணன்; பண்ணொடு பாடவல்லவன்; இயையாதவரை இயையும்படி செய்வது அவன் தொழில். ஊடல் தணிக்க அவன் துாதுவன்; தலைவன் வேண்டுகோளுக்கு தலைவியை இயையும்படிப் பேசி அசைய வைக்க முயல்கிறான். அதற்குத் தலைவி கூறுகிறாள்.

'ஐயா திறமைசாலி, கறுப்புக் கொள்: சிவப்புக் கொள்; அவன் நிற பேதம் பார்க்காமல் இரண்டையும் சம விலைக்குப் பேசி வாங்கிக் கொண்டு வந்துவிட்டதாக அவன் பெருமை பேசினான், இவன் வியாபாரம் செய்யத் தக்கவன் என்று யார் மதிப்பார்கள்?

'கொள் சிவப்பாக இருக்கிறதே என்று அதனையும் கொள்முதல் செய்துவிட்டேன்' என்கிறான். பரத்தையையும், சிரத்தையையும் ஒன்றாக மதிக்கிறார் உம் தலைவர். சிரத்தையோடு வாழ்க்கை நடத்தும் எனக்குத் தரும் மதிப்பையே அவளுக்கும் தருகிறார். இவர் புத்தி அந்த வியாபாரியின் புத்தி என்று தான் கூறமுடியும். நிறம் இவரை மயக்கிவிட்டது. கறுப்புக்கொள் விருப்பத்திற்கு உரியது. சிகப்புக்கொள் துார எறிய வேண்டியது. இந்தப் பேதம் கூட அறியாத வேதம் உம் தலைவரது. இந்த நாதம் நம்மிடம் இசையாது, அசையாது? என் மனம் அசையாது.