பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171


தலைவன் தலைவியின் பிரிவுக்கு வருந்துதல்

காலையரும்பிப் பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் மங்கையின் காதல் நோய்; கதிரவன் கால் சாய்க்கின்றான். அதிரவரும் மாலைப்பொழுது கண்டு அவள் கண்கள் நீர் நிறைக்கின்றன. அவள் தன் மெல்லிய விரலால் அதனைச் சிதற அடித்துத் தனிமையில் பதறுகின்றாள், மோனம் அங்குக் குடி கொள்கிறது. விம்முகிறாள்; அவள் குரல் கம்முகிறது. கும்மிருட்டு வந்து குவிகிறது. இதற்கு எல்லாம் காரணம் என்ன? வருகிறேன் என்று குறித்த நாளில் அவர் அங்குச் செல்ல இயலவில்லை. அவர் தோள் மேல் தன் கைவைத்து உறக்கமின்றி இரவு கண் விழித்து என் குற்றத்தையே அவள் எண்ணுவாளோ, என் செய்வது? வினை முடிந்ததும் வீடு திரும்ப விழைகிறேன். நான் வரும் நாள் எண்ணி விரலைச் சுவரில் தேய்த்து நாட்குறி வைக்கிறாள். அவள் விரல் தேய்கிறது. என்னை எதிர் பார்த்துப் பார்த்து அவள் விழிகள் ஒளி இழக்கின்றன.

தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல்

கயல் ஒத்தன அவள் கண்கள்; அவற்றைக் கயல்மீன் என்று கருதிச் சிரல் பறவை அவற்றைக் கொத்திக் கவர அருகில் தத்திச் செல்கின்றன. அந்தோ! அங்கே வில்லின் வளைவை அவள் புருவத்தில் காண்கிறது. களம் கண்ட வீரன் உளம் அஞ்சிப் பின் வாங்குகிறான். அதுபோல் இந்தச் சிரல் பறவையாகிய மீன் கொத்தி அஞ்சிப் பின் வாங்குகிறது. அவள் விழிகள் கயல் மீன் என்றால் புருவங்கள் வில்லின் வளைவு.