பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


"உன் நண்பன் தான்; நீ சொன்ன சொற்களை அவன் சுடுசொற்களாக ஏற்கிறான்; தீயினால் சுட்டபுண்; அதன்வடுமாற வில்லை. வெந்நீர் தணிந்தால் தண்ணீர் ஆகிறது. பெரியோர் சினம் வெந்நீர்; அஃது ஆறாமல் இருக்காது; விரைவில் குளிர்ந்துவிடும்."

"நன்றி ஒருவர் செய்தக்கால் அந்நன்றியை மறவாமை நயப்புடையதாகும். அடுக்கிய இடுக்கண்கள் பல செய்திருந்தாலும் அவற்றை வடுக்களாகக் கொள்ளார் மேலோர். நாய் கடிக்கிறது என்றால் அதனைத் திருப்பிக் கடிக்கவா முடியும்? கீழ்மகன் தடித்துப் பேசுவான். அதற்காக மடித்துத் திருப்பித் தாக்கத் தேவை இல்லை. அவன் உன்னை மடையன் என்று கூறிவிட்டால் அதற்காக அவனைக் கடையன் என்று கழறாதே. அவசரப்பட்டு ஆராயாமல் சொல்லி இருக்கிறான். அவன் தெளிவு பெற்றால் தவறு உணர்வான். திருப்பித் தாக்கிவிட்டால் அவன் கூற்று மெய்யாகிவிடும்; அதற்கு நீ துணை செய்யாதே; சால்பு கெடும்; சினத்தை விடுக."

8. பொறுத்தவர் பூமி ஆள்வார்

(பொறை உடைமை)

"அற்ப சகவாசம் உயிர்க்கு இறுதி விளைவிக்கும்; பிராண சங்கடம். யாவரோடு பேசுவது; யாவரோடு பழகுவது என்பதைச் சிந்தித்துப்பார். சின்னவர்களோடு சிநேகம் கொண்டால் அவர்கள் தம் பின்ன புத்தியைக் காட்டுவர். தொடர்ந்து இன்னல்களைத் தந்து கொண்டே இருப்பார்கள்; அதனால் உனக்குக் கொதிப்பு வரும்; மதிப்புக் குறையும். அவர்களை விட்டு விலகு."