பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

நலம் இவற்றைப் புலவர்கள் காட்டுவர். இவர்கள் கூடிப் பேசிப் பிரிந்த பிறகும் அவை எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து மகிழ வைக்கின்றனர். கவிதை கற்கண்டு; அதன் சுவை கண்டு: மலரை நாடும் வண்டு எனச் சுழல வைக்கின்றனர். அவர்கள் எந்தக் களங்கமும் இன்றிக் கலந்து உரையாடி அக மலர்ந்து சிரிக்கும் சிரிப்புக்கு நிகராக எந்த இன்பத்தையும் இணை கூறமுடியாது. அதற்குச் 'செஞ்சொற் கவிஇன்பம்' என்றும், 'செவி நுகர் கனிகள்' என்றும் பெயர் கொடுத்து மகிழலாம்.

சோற்றைக் கொட்டினால் வாரி வாரித் தின்கிறான் பசித்துக் களைத்து அலுத்தவன்; 'பசி ருசி அறியாது' என்பர். நட்பு நுட்பமானது சுவைத்து மகிழக் கூடியது; நிலைத்த பயன் பெறுவது. அது சென்று தேய்ந்து இறுவது அன்று. நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக மலர்வது. பட்டினத்தார் கரும்பைச் சுவைத்தாராம்; அடிப் பகுதியிலிருந்து தொடங்கிக் கடித்துச் சுவைத்து வந்தார். நுனிப்பகுதி வந்ததும் கசந்து விட்டதாம். அந்த இடத்திலேயே அவர் சமாதி ஆகிவிட்டார் என்று கதை பேசுகிறது. கரும்பு தின்பதில் ஒரு வரன் முறை உண்டு. அடிப்பகுதி சுவைக்கும்; நுனிப்பகுதி சுவையற்று வெறுமை பெற்றிருக்கும். கற்றவர் நட்பு, தொடக்கத்தில் வெறுமையாகத்தான் காணப்படும்; போகப் போகப் பெருமை தரத் தக்கதாக அமையும். கீழோருடன் தொடக்கத்தில் "ஆகா என்னே செறிவு!" என்று இருக்கும்; பிறகு வர வரச் சரிவுதான் மிகுக்கும்.

பாதிரிப் பூவை மண் குடத்தில் போட்டு அதில் குளிர் நீர் ஊற்றினால் அது மணக்கிறது; நீர் குடிக்க இனிக்கிறது.