பக்கம்:நாலு பழங்கள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாலு பழங்கள்

3

வந்து கொடுக்க முயலுவார்கள். யார் முதலில் கொண்டு வந்து கொடுக்கிறாரோ அவரையே நீ திருமணம் செய்து கொள்ளலாம்" என்றான்.

உடனே அந்த அரசகுமாரி தன் கருத்தை வெளியிட்டாள். "எனக்கு வேண்டிய பழங்கள் நாலு, ஒரு பழம் பழமானாலும் காயாகவே இருக்கும். பூப் பூத்தால் அது உதிர்ந்து காய் உண்டாகிக் கனி வருவதுதான் இயல்பு, ஆனால் காய் காய்த்தாலும் பழம் பழுத்தாலும் பூ இருக்கும் பழம் ஒன்று வேண்டும். அது இரண்டாவது. மூன்றாவது, பூ மலர்ந்தால் அழகாக இருக்கும். அது காயாகிப் பழுத்தால் யாரும் அதை விரும்ப மாட்டார்கள். அதைக் கண்டு அஞ்சுவார்கள். அது மூன்றாவது பழம். பழத்தைத் தின்று அதிலுள்ள கொட்டையை உமிழ்ந்து விடுவது வழக்கம். ஆனால் ஒரு பழம் தின்றாலும் கொட்டைக்குப் பழுது வராது. அது நாலாவது பழம். இந்த நான்கு பழங்களையும் யார் கொண்டு வந்து தருகிறார்களோ, அவர்களுக்கே நான் மாலையிடுவேன்" என்று அரச குமாரி கூறி முடித்தாள்.

சபையில் உள்ள சிலர், "ஏதோ பைத்தியக்காரத் தனமாக இந்தப் பெண் உளறுகிறது. இதைக் கேட்டுக் கொண்டு அரசனும் இந்தச் சபையைக் கூட்டி அந்த உளறலைக் கேட்கும்படி செய்தானே!" என்று பேசிக் கொண்டார்கள். வந்திருந்த அரச குமாரர்களில் பலர், "இந்தப் பெண் சொல்லும் பழங்களை நாம் தேடவும் வேண்டாம். இவளைக் கல்யாணம் செய்து கொள்ளவும் வேண்டாம்" என்று சொல்லிப் போய்விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/9&oldid=1084189" இலிருந்து மீள்விக்கப்பட்டது